21 பாசன சபை தலைவர் பதவிகளையும் அள்ளிய தி.மு.க.
பி.ஏ.பி. திட்டம் பரம்பிக்குளம்
அணைக்கோட்டத்திற்கு உட்பட்ட 21 பாசன சங்கங்களின் தலைவர் பதவிகளிலும் தி.மு.க. வினரே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பி.ஏ.பி. எனப்படும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில்,
பரம்பிக்குளம் அணைக்கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான
தலைவர் மற்றும் ஆட்சிமண்டலத் தொகுதி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது
தொடர்பாக தேர்தலை நடத்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். அதன்பேரில், பரம்பிக்குளம்
அணைக்கோட்டத்திற்கு உட்பட்ட 21 நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான 21 தலைவர் மற்றும் 90 ஆட்சி மண்டல உறுப்பினர்களை நேரடித் தேர்தல் மூலமாக தேர்வு செய்ய வேட்பு மனுத்தாக்கல் கடந்த 16ம் தேதியன்று
நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 90 ஆட்சி மண்டலத்
தொகுதி உறுப்பினர் பதவிக்கு அனைத்து உறுப்பினர்களும் போட்டியின்றி
தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், மொத்தமுள்ள 21 சங்கங்களுக்கான தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களில், 18 சங்கங்களுக்கான தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் மீதமுள்ள 3 சங்கங்களுக்கான நேரடித் தேர்தல் இன்று (27ம் தேதி) நடந்தது.
வேட்டைக்காரன்புதூர் கால்வாய் மார்ச்சநாயக்கன்பாளையம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவருக்கான தேர்தல் ஆனைமலை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பொள்ளாச்சி கால்வாய் ஊத்துக்குளி நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவருக்கான தேர்தல் ஜமீன் ஊத்துக்குளி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மண்ணூர் கிராம நீரினைப்
பயன்படுத்துவோர் சங்கத் தலைவருக்கான தேர்தல் ராமபட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது. இத்தேர்தலில் பாசன சபைக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிகை நடைபெற்றது. இதில் மார்ச்சநாயக்கன்பாளையம் கிராம நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவராக செல்வராஜ், ஊத்துக்குளி நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவராக காளிதாஸ், மண்ணூர் கிராம நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவராக தர்மலிங்கம் ஆகியோர் தேர்வாகினர்.
வெற்றிபெற்ற பாசன சங்க தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர். வரதராஜன் நிருபர்களிடம் கூறிதாவது, தமிழகத்தில் விவசாயிகளுக்கான தனி பட்ஜெட்டை தாக்கல் செய்தது மட்டுமல்ல, விவசாயிளுக்காக பல்வேறு நலத்திட்டங்களையும் முதல்வர் தளபதியார் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
இதனை நன்கு உணர்ந்த விவசாயிகள் 21 பாசன சங்க தலைவர்களாக தி.மு.க. வைச் சேர்ந்தவர்களையே தேர்வு செய்துள்ளனர். இந்த வெற்றியை முதல்வரிடம் சமர்ப்பிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது ஒன்றிய செயலார்களான செட்டிக்காபாளையம் துரை, கன்னிமுத்து, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சித் தலைவர் அகத்தூர்சாமி, ஆனைமலை முன்னாள் பேரூராட்சித் தலைவர் சாந்து என்கிற சாந்தலிங்க குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.