அமைதியாக நடந்த முதல் கவுன்சில் கூட்டம்
பொள்ளாச்சி நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவரின் (துணை பேராசிரியர்) சாமர்த்தியத்தால் மிகவும் அமைதியாக நடந்து முடிந்தது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றிற்கு புதிய மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு, தலைவர், துணைத் தலைவர் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியின் முதல் கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. நகராட்சித் தலைவர் ( துணை பேராசிரியர்) சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, துணைத்தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடவுள் வாழ்த்துடன் துவங்கிய கூட்டத்தில் தலைவர் தலைமையில் அனைத்து கவுன்சிலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
துணைத்தலைவர் கௌதமன் பேசுகையில், நகராட்சிக்கு தேர்வாகியுள்ள கவுன்சிலர்களில் 85 சதவிகிதம் பேர் புதியவர்கள். ஆகவே நகராட்சியின் விதிகள், கவுன்சிலர்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் முழுமையாக விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கவுன்சிலர் ஜேம்ஸ் ராஜா (அ.தி.மு.க.) பேசுகையில், தீர்மானத்தின் அடிப்படையில் ஒரு சில சந்தேகங்களை கேட்டுவிட்டு, தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சில பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் தீர்மானம் கொண்டு வந்துள்ளதற்கு நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார். 1வது வார்டு கவுன்சிலர் உமாமகேஸ்வரி பேசுகையில், எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஏற்கனவே மூன்று பூங்காக்கள் உள்ளன. அவையும் சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் மேலும் புதிதாக மூன்று பூங்காக்கள் அமைக்க தீர்மானம் கொண்டு வந்துள்ளீர்கள். அரசின் நிதியை வீணடிக்க வேண்டாம் என்று கருதுகிறேன் என்று கேட்டுக்கொண்டார்.
புதிய கவுன்சிலர்களில் செந்தில், கந்தமனோகரி, நர்மதா உள்ளிட்ட சிலர் தங்களது கன்னிப் பேச்சாக நகராட்சி நிர்வாகத்திற்கு சில கோரிக்கைகளை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் பேசுகையில், கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக நேரத்தை வீணடிக்காமல் நேரடியாக விஷயத்தை சொல்லவும். இல்லையென்றால் தங்கள் கோரிக்கையினை கடிதமாக எழுதி சமர்ப்பிக்கலாம். எந்தவித பாகுபாடுமின்றி பிரச்சினையின் தன்மையைப் பொருத்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கிறேன். என்று ரத்தின சுருக்கமாக பேசி கூட்டத்தை அமைதியாக முடித்தார்.
இம்முதல் கூட்டத்திற்கு தலைவர், துணைத்தலைவர் உட்பட 35 கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. வைச் சேர்ந்த 8வது வார்டு கவுன்சிலர் வசந்த் மட்டும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.