தோட்ட உரிமையாளர் கடத்தல் வழக்கில் 4 பேர் கைது
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் தோட்ட உரிமையாளரை கடத்திச் சென்று பணம் பறித்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையைச் சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம். வீடுகள் கட்டி விற்பனை செய்து வரும் இவருக்கு காந்தி ஆசிரமம் பகுதியில் சொந்தமாக தோட்டமும் உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், அவரது உறவினர்கள் ஆனைமலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து அப்துல் ஹக்கீமை தேடி வந்தனர். இந்நிலையில் உடலில் காயங்களுடன் தானாக வீடு வந்த அவரை அவரது குடும்பத்தார் அம்பராம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் அவரிடம் விசாரித்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
போலீசாரிடம் அவர் கூறுகையில், எனது தோட்டத்துக்கு அடிக்கடி தேங்காய் போடும் பணிக்காக வந்து செல்லும் கிழவன் புதூரைச் சேர்ந்த ராசுகுட்டி என்பவர் சம்பவத்தன்று மாலை, எனக்கு வீடியோ கால் செய்து அந்த வீடியோவில் எனது தோட்டத்தில் தேங்காய்கள் திருடு போனது தொடர்பாக சில காட்சிகளை காண்பித்தார்.
அதுகுறித்துப் பேச வேண்டும் என்றும் என்னிடம் கூறினர். மேலும் தனது காரில் பெட்ரோல் தீர்ந்துபோய் காந்தி ஆசிரமம் பகுதியில் நிற்பதாகவும், என்னை பெட்ரோல் வாங்கி வரும்படியும் கூறினார்.
நானும் பெட்ரோல் வாங்கிக்கொண்டு காந்தி ஆசிரமம் பகுதிக்குச் சென்றேன்.
அங்கு காருடன் ராசுகுட்டி நின்று கொண்டிருந்தார். அவரோடு அடிக்கடி வேலைக்கு வரும் தேவி பட்டணத்தைச் சேர்ந்த அஜய் பிரகாஷ், வேட்டைக்காரன் புதூரை சேர்ந்த கவின் ஆகிய இருவரும் என்னை திடீரென இழுத்து காருக்குள் தள்ளினர்.
ராசுகுட்டி வேகமாக காரை எடுத்து அங்கிருந்து கிளம்பினார். உடுமலை ரோட்டில் செல்லும்போது அரசு மருத்துவமனை அருகே சூர்யா என்பவரும் காரில் ஏறிக்கொண்டார். ஒரு நாள் முழுவதும் தாராபுரம், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் சுற்றிவிட்டு, என்னிடமிருந்த பணம் ரூபாய் 7 ஆயிரத்தையும் பறித்துக்கொண்டு இறுதியாக உடுமலை ரோடு கெடிமேடு பகுதியில் ஒரு தோட்டத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு வைத்து என்னை அடித்து துன்புறுத்தி ரூபாய் 5 லட்சம் வேண்டும் என கேட்டு மிரட்டினர்.
மீண்டும் என்னை காரில் ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி மரப்பட்டை அருகே வந்து இறக்கி விட்டுவிட்டு, உடனடியாக பணத்தை ரெடி பண்ணி தகவல் கொடுக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து தப்பினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து ஆனைமலை போலீசார் வேகமாக செயல்பட்டு ராசுகுட்டி, அஜய் பிரகாஷ், கவின் மற்றும் சூர்யா ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.
ஆனைமலையின் சுற்றுவட்டார பகுதிகளில் இது போன்று பணத்திற்காக ஆள் கடத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.