தனியார் தோட்டத்தில் தலை துண்டாகி அழுகிய நிலையில் ஆண் பிரேதம்
பொள்ளாச்சியை அடுத்த சோளபாளையம் ஊராட்சியில் ராமச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. அதில் ஏராளமான மா மரங்களும் உள்ளன. இந்நிலையில் இன்று காலை ராமச்சந்திரனின் மகன் குமாரவேல் என்பவர் தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்குள் சென்றுள்ளார். அப்போது மா மரம் ஒன்றின் அருகே அழுகிய நிலையில் ஆண் பிரேதம் ஒன்று கிடப்பதைப் பார்த்துள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், இறந்தவருக்கு சுமார் 25 வயதிருக்கலாம். அவர் சுமார் 10 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கறோம். உடல் அழுகி கீழே விழுந்துள்ளது. தலை மட்டும் மரத்தில் தொங்குகிறது. அவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்?, சம்பவம் நடந்து 10 நாட்களாகியும் தோட்டத்தில் இருந்தவர்களுக்கு எப்படி தெரியாமல் போனது, இது தற்கொலையா அல்லது யாரேனும் கொலை செய்து உடலை மரத்தில் தொங்கவிட்டார்களா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம் என்றனர். பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.