தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து நலத்திட்ட உதவிகள்
கோவையைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஆனைமலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மலைவாழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
கோவையில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களான அன்பகம் அறக்கட்டளை, காக்கும் கரங்கள், ஹேண்ட்ஸ் ஆப் ஹோப் ஆகியன இணைந்து பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மலைவாழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள சிறப்பு பிரிவில் பயிலும் நாற்பது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வட்ட வடிவிலான மேஜை, இருக்கைகள், நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருட்கள் மற்றும் மூன்று சக்கர நாற்காலி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன.
அன்பகம் அறக்கட்டளை நிர்வாகி பிருந்தா, காக்கும் கரங்கள் நிர்வாகி அருணா, ஹேண்ட்ஸ் ஆப் ஹோப் நிர்வாகி ஆர்த்தி ஆகியோர் இப்பொருட்களை தங்கள் சொந்த செலவில் வழங்கினர்.
தொடர்ந்து ஆழியார், பெரியபோது, கிழவன் புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், பிளாஸ்டிக் பக்கெட், மக், கொசு விரட்டும் பேட், பாய் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினர். ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சிறப்பு ஆசிரியர் சபீகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.