ஈமக்கிரியை மண்டபம் கட்ட ஊராட்சி நிர்வாகம் எதிர்ப்பு: களமிறங்கிய மக்களால் பரபரப்பு
மயிலாடுதுறை ஒன்றியம் பட்டமங்கலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈமக்கிரியை மண்டபத்தின் கட்டுமானப் பணியை கிராம மக்களே தொடங்கியதால் பரபரப்பு.
மயிலாடுதுறை ஒன்றியம் பட்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சள் ஆற்றங்கரை பகுதியில் ஈமக்கிரியை மண்டபம் இல்லாததால் அப்பகுதி மக்கள் ஆற்றங்கரையின் ஓரம் ஈமக்கிரியை செய்து வந்தனர். அந்த இடத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் நிதியில் ரூ.7 லட்சம் மதிப்பில் ஈமக்கிரியை மண்டபம் கட்டுவதற்காக பணிகள் கடந்த மார்ச் 2ம் தேதி தொடங்கியது. இதற்கு ஊராட்சித் தலைவர் செல்வமணி தடையாக இருப்பதாக குற்றம்சாட்டி அப்போது கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அமைதி பேச்சுவார்த்தையின் முதல் கூட்டத்தில் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை.
இதையடுத்து, மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், ஊராட்சித் தலைவர் தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆரம்பப் பணியுடன் நின்றிருந்த ஈமக்கிரியை கட்டடம் கட்டும் பணியை தாங்களே தொடங்கினர். இதில், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தாங்களே சிமெண்ட் கலவையைக் கொண்டு கட்டுமானப் பணியை தொடங்கினர். தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீஸார், கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த கிராம மக்களை தடுத்து நிறுத்தினர். இதனால் கிராம மக்களுக்கும், போலீருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண்பது என தீர்மானிக்கப்பட்டதையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் ராஜேஷ்,
நாகை மாவட்டம்