பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் புதிய பாலம் திறப்பு
பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் ரயில்வே கேட் மூடப்படுவதால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அப்பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து கடந்த 2016ம் ஆண்டில் புதிதாக மேம்பாலம் கட்டுவதற்கு அரசால் அனுமதி வழங்கப்பட்டது.
ரூ.52 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் 810 மீட்டர் நீளத்தில், 17 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. கொரோனா பரவல் காரணமாக கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் பணிகள் முழுமை பெற்றுள்ளதால் பாலம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் புதிய பாலத்தை திறந்து வைத்தார்.
இதற்கென பொள்ளாச்சியில் புதிய பாலம் அருகே நடைபெற்ற
நிகழ்ச்சியில் தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர். வரதராஜன், நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்,
வக்கீல் அதிபதி, ம.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் குகன் மில் செந்தில், தி.மு.க. ஒன்றிய செயலாளர் யுவராஜ், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஜெயலட்சுமி, உதவி கோட்ட பொறியாளர் மல்லிகா, பொறியாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தற்போது பாலம் கட்டி
முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.