கோட்டூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த எம்.எல்.ஏ. கோரிக்கை
பொள்ளாச்சியை அடுத்த கோட்டூரில் உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி பேசியதாவது, ஸ்ரீவில்லிபுத்தூர்
சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வர இயலவில்லை. அவரின் சார்பாக எஸ். கொடிக்குளத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசு முன்வருமா எனவும், எனது வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் அரசு மருத்துவமனை மற்றும்
பெத்தநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றிற்கு போதிய
வசதி இருக்கின்றது. எனவே அதனை அரசு தரம் உயர்த்துமா.? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலளிக்கையில்,
எஸ். கொடிக்குளம் பேரூராட்சியைப் பொறுத்தவரை அதில் 15 வார்டுகள் இருக்கின்றன. அங்கே இருக்கின்ற வீடுகளின் எண்ணிக்கை 3,636 ஆகும். அந்த பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 14,115. அங்கே ஏற்கெனவே 3 துணை சுகாதார மையங்கள்
கொடிக்குளம், கோமாப்பட்டி, நெடுங்குளம் ஆகிய இடங்களில் இருக்கின்றன. 3 சுகாதார மையங்களும் நலவாழ்வு மையங்களாக மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சட்டமன்ற உறுப்பினர் கேட்டிருக்கின்ற, அவருடைய தொகுதிக்குட்பட்ட அந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படுவதற்கான
சாத்தியக்கூறுகளும் ஆராயப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.