புதிய பாலத்தில் கார் விபத்து
உயிர் தப்பிய இருவர்
பொள்ளாச்சியில் ஏற்பட்ட கார் விபத்தில் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நேற்று இரவு சிவகாசியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் காரில் மேம்பாலத்தை கடந்து கொண்டிருந்தார். அப்போது குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த மதினா என்ற பெண் இரு சக்கர வாகனத்தில் பாலத்தின் குறுக்கே சாலையை கடக்க முற்பட்டார். எதிர்பாராதவிதமாக கார் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தின்போது காரில் இருந்த ஏர் பலூன் வேலை செய்ததால்
சுப்பிரமணியம் காயமின்றி உயிர் தப்பினார். லேசான காயங்களுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற மதினாவும் வீடு திரும்பினார். மேம்பாலத்தின் இருபுறமும் போதிய தெருவிளக்கு வசதி இல்லாதது, இணைப்பு சாலைகளில் வேகத்தடை அமைக்காதது ஆகவே இதுபோன்ற விபத்துகளுக்கான காரணம் என்று கூறும் பொதுமக்கள், குறிப்பாக தனியார் திருமண மண்டபங்கள் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு சிறப்பு சலுகையாக ரோட்டின் தடுப்புகளில் ஆங்காங்கே வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதே விபத்திற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கின்றனர்.