கார் – பைக் மோதல் வீடியோ வைரலால் பரபரப்பு
பொள்ளாச்சி அருகே பைக் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் தம்பதியர் மற்றும் மகள் என மூவர் படுகாயம்.
பொள்ளாச்சியை அடுத்த ஊஞ்சவேலம்பட்டி யைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி சாந்தி. இவர்களது மகள் காளீஸ்வரி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ராஜூ தனது மனைவி சாந்தி, மகள் காளீஸ்வரி உடன் கஞ்சம்பட்டியில் உள்ள மருத்துவமனைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். செல்லப்பம்பாளையம் பிரிவு அருகே வந்து, உடுமலை ரோட்டை கடக்க முற்படும்போது, பழனி சிவகிரி பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான கார்த்திக்காமாட்சி என்பவர் காரை அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் ஓட்டி வந்து பைக் மீது அதிவேகத்தில் மோதினார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பைக்கில் இருந்த மூவரும் தூக்கி வீசப்பட்டு ரோட்டில் சிறிது தூரம் உருண்டு சென்றனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மூவரையும் உடனடியாக மீட்டு பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.