மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் முதல்வர் காணொளி காட்சி மூலம் சந்திப்பு
பொள்ளாச்சி, ஏப். 17-
விவசாய மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் முதல்வர் காணொளி காட்சி மூலம் சந்திப்பு நிகழ்ச்சி பொள்ளாச்சி அருகே நடைபெற்றது.
தமிழகத்தில் பதிவு செய்து காத்திருப்போரில் ஒரு ஆண்டில் ஒரு லட்சம்
விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இலக்கை பூர்த்தி செய்த நிலையில் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநிலம் முழுவதிலும் ஆங்காங்கு இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சி மின்சார வாரிய அலுவலகம் சார்பில் நா.மூ. சுங்கம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மண்டல மின்பகிர்மான தலைமைப்பொறியாளர் டேவிட் ஜெபசிங் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜாத்தி முன்னிலை வகித்தார். அங்கலக்குறிச்சி செயற்பொறியாளர் ராம்பிரகாஷ், உதவி செயற்பொறியாளர்கள் ராஜகோபால், தேவானந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர். அங்கலக்குறிச்சி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 993 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.