உலக பூமி தினத்தை முன்னிட்டு
கவுன்சிலர்களுக்கு மரக்கன்றுகள்
உலக பூமி தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி நகராட்சியில் கவுன்சிலர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
உலக பூமி தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக பூமி தினம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் பேரணி, மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பொதுநல அமைப்புகள், தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சார்பில் உலக பூமி தினம் கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகர்நல அலுவலர் ராம்குமார் முன்னிலை வகித்தார். நகராட்சி அலுவலக வளாகத்தின் முன்பகுதியில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் தர்மராஜ், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் பேரவையின் தலைவர் வெள்ளை நடராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.