கேஸ் ஆலையில்
தீத்தடுப்பு ஒத்திகை
கிணத்துக்கடவு அருகே உள்ள பெரியகளந்தை இண்டேன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள பெரியகளந்தையில் இண்டேன் ஆயில் கார்ப்பரேஷன் கேஸ் நிரப்பும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கோவை, மேட்டுப்பாளையம், நீலகிரி, ஈரோடு, பெருந்துறை, பவானிசாகர், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில், பல்லடம், திருப்பூர், மடத்துக்குளம், பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், வால்பாறை மற்றும் கேரளா மாநிலம் ஆகிய இடங்களுக்கு லாரி மற்றும் டேங்கர் லாரி மூலம் கேஸ் கொண்டு செல்லப்படுகிறது. நேற்று நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில், நிறுவனத்தில் பகல் சுமார் 2 மணி அளவில் திடீரென்று கேஸ் நிரப்பும் இடத்தில் இருந்து அபாய சங்கு ஒலித்தது. இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஒத்திகை பயிற்சி குறித்து கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நவீன கருவிகள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து விபத்து எற்படாமல் தடுத்தனர். இதற்கிடையே ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி டாக்டர்கள் மற்றும் அவரது குழுவினர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் காட்சியை தத்ரூபமாக செய்து காட்டினார்கள். தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சரவணன் முன்னிலையில் முதுநிலை மேலாளர் (ஆலை) சுந்தர் தலைமையில் ஒத்திகை நடைபெற்றது.
அதிகாரிகள், ஊழியர்களின் செயல்பாட்டை பெரியகளந்தை இண்டேன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள், பாராட்டினார்கள். இதில் இருகூர் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பரஸ்பர உதவி ஒப்பந்த உறுப்பினர்கள், இந்தியன் ஆயில் ஏர்போர்ட் டெர்மினல் அலுவலர்கள் மற்றும் கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.