வாழ வழி கேட்கும் திருநங்கைகள்
உண்ணாவிரதம் இருக்க முடிவு
பொள்ளாச்சியில் இலவச வீட்டுமனை, தொழில் தொடங்க உதவி உள்ளிட்ட வாழ்வாதாரத்திற்கான உதவிகளை செய்யாத பட்சத்தில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக திருநங்கைகள் முடிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு, சகோதரி அறக்கட்டளை நிறுவனர் கல்கி சுப்பிரமணியம், திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர் பிரியாபாபு, கோவை மாவட்ட திருநங்கைகள் நலச்சங்க செயலாளர் ஸ்ரீவீணா யாழினி ஆகியோர் தலைமையில் ஏராளமான திருநங்கைகள் வந்திருந்தனர். அப்போது சப்-கலெக்டர் இல்லாததால் அவரது நேர்முக உதவியாளர் வெங்கடாசலத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், பொள்ளாச்சி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 80க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசிக்கின்றனர். பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதி திருநங்கைகள் 25 பேருக்கு கடந்த 2015ம் ஆண்டு இலவச
வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த 25 பேரில் மூன்று பேர் மட்டுமே வீடு கட்டியுள்ளனர். 22 பேர் வீடுகட்ட போதுமான நிதி வசதி இல்லை.
முதலமைச்சர் மற்றும் பிரதமர் வீடு கட்டும் நிதிகூட பெற இயலவில்லை. இதுவரை வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் திருநங்கைகளுக்கு தொகுப்பு வீடுகளும் ஒதுக்கப்படவில்லை. சமத்துவபுரம், பசுமை வீடுகள் உள்ளிட்ட அரசின் திட்டங்கள்
எல்லாம் எங்களுக்கு கனவாகவே உள்ளது. இது சம்பந்தமாக சார் ஆட்சியரை பலமுறை நேரில் சந்தித்து மனு கொடுத்தும் எந்தப்பலனும் இல்லை.
மேலும் பொள்ளாச்சியிலுள்ள திருநங்கைகளுக்கு சுயதொழில் தொடங்க ஆடு, மாடு வளர்ப்பில் ஈடுபட சார் ஆட்சியாளரிடம் உதவி கோரினோம். ஆனால் கடந்த ஓர் ஆண்டில் அவர் எந்த உதவியும் எங்களுக்கு செய்யவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் உள்ளோம். சார் ஆட்சியாளர் எங்களுக்கு இனிமேலும் உதவிகள் ஏதும் செய்யவில்லை என்றால் விரைவில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அதேபோல் விண்ணப்பம் கொடுத்தும் நிறைய திருநங்கைகளுக்கு மாத ஓய்வூதியம் கிடைக்கவில்லை. தி.மு.க. அரசு திருநங்கைகளின் வாழ்க்கையை
மேம்படுத்த உறுதி பூண்டுள்ளது. ஆனால் பொள்ளாச்சி சார் ஆட்சியாளர் உதவி செய்ய முயற்சிப்பதில்லை.
இதனை கலெக்டர், துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் பார்வைக்கு
கொண்டுசெல்லவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.