உட்கட்சித் தேர்தலில் குளறுபடி
தி.மு.க. விசுவாசிகள் மறியலுக்கு முயற்சி
தி.மு.க. உட்கட்சித் தேர்தல் குளறுபடியால் அதிருப்தியடைந்த விசுவாசிகள் சாலை மறியலுக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகம் முழுவதிலும் உட்கட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என தி.மு.க. தலைமை சமீபத்தில் அறிவித்தது. அதன்படி அனைத்து ஊராட்சிகளிலும் கிளைக் கழக செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு முறையாக அறிவிப்பு செய்து நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது நகர செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர நிர்வாகிகளுக்கான தேர்தலில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டது. அதிலும் உச்சபட்சமாக சில தி.மு.க. விசுவாசிகள் பல்லடம் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகம் முன்பாக சாலை மறியலுக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருவழியாக போலீசாரின் உதவியோடு அதிருப்தியாளர்கள் சமாதானப் படுத்தப் பட்டனர். அதன் பிறகே சாலை மறியல் கைவிடப்பட்டது.
மறியலுக்கு முயற்சித்த தி.மு.க. விசுவாசிகள் கூறியதாவது, தி.மு.க. உட்கட்சித் தேர்தல் தலைமை அறிவித்தபடி மாநிலம் முழுவதும் சுமூகமாக நடந்து வருகிறது. ஆனால் கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரில் மட்டும் கட்சிக்காக உண்மையாக பாடுபடுபவர்கள், விசுவாசிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
நகர வார்டை பொருத்தவரை அவைத் தலைவர், செயலாளர், பொருளாளர், இரண்டு துணைச் செயலாளர், இரண்டு பிரதிநிதி மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 17 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதில் பெரும்பாலும் செயலாளர் பதவிக்கு மட்டுமே அதிக போட்டி இருக்கும். அதன்படி பொள்ளாச்சி நகரில் உள்ள முப்பத்தி ஆறு வார்டுகளிலும் செயலாளர் பதவிக்கு ஏராளமானோர் விருப்ப மனு செய்திருந்தனர். ஆனால் கோவை ரோட்டில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நள்ளிரவு 2 மணி வரை ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி நிர்வாகிகளை முடிவு செய்துவிட்டனர். அந்த முடிவை தலைமைக்கு அனுப்பவும் முடிவு செய்துவிட்டனர். இத்தகவல் அறிந்ததும் தான் நாங்கள் கட்சி அலுவலகத்துக்கு வந்து நிர்வாகிகளிடம் பேசினோம்.
நகராட்சி கவுன்சிலர், நகர வார்டு செயலாளர் மற்றும் பல்வேறு பொறுப்புகளை வகித்து கொண்டிருக்கும் நபர்களுக்கு மீண்டும் வாய்ப்புகளை அளித்துள்ளனர். போராட்டம் ஆர்ப்பாட்டம் உட்பட கட்சிக்காக மட்டுமே விசுவாசமாக பாடுபட்டவர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டனர். அதனை ஏற்றுக் கொள்ளாமல் தான் மறியலுக்கு முயற்சித்தோம். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதற்காகவே நாங்கள் மறியலை கைவிட்டு உள்ளோம்.
நகராட்சி கவுன்சிலர் ஒன்றிய கவுன்சிலர் பேரூராட்சி கவுன்சிலர் களுக்கான வேட்பாளர்கள் தேர்வில்லேயே மாவட்ட நிர்வாகத்தினர் சுயநலமாக செயல்பட்டனர். இதன்காரணமாக அதிருப்தியில் மாநிலத்திலேயே நமது மாவட்டத்தில்தான் அமைச்சரை முற்றுகையிட்ட சம்பவங்களும் அரங்கேறின. உட்கட்சித் தேர்தலும் முறையாக நடத்தப்போவதாக தெரியவில்லை. இந்நிலை நீடித்தால் மீண்டும் எதிர்க்கட்சியினர் நம்மை கேவலமாகத்தான் பேசுவார்கள். எது எப்படியோ நாங்கள் கட்சிக்காக விசுவாசமாகவே உழைப்போம். இவ்வாறு தெரிவித்தனர்.