கொடைக்கானலில் தொடரும் காட்டுத்தீ சம்பவம்கள் – காட்டுத்தீயில் சிக்கி மின் வயர்கள் எரிந்து நாசம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. வனப்பகுதி வழியாக சென்ற மின் வயரில் காட்டுத்தீ பற்றி சேதமடைந்தன. இதனால் கிளாவரை, பூண்டி, போளூர் உள்ளிட்ட கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது. காட்டுத்தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் மின் வயர்களை சீரமைக்க முடியாமல் மின் ஊழியர்கள் தவித்தனர். ஓரளவு காட்டுத்தீயின் வேகம் குறைந்த பின்னர் போராடி மின் வயர்களை சீரமைத்தனர். இதனால் மலை கிராமங்களில் பல மணி நேரம் மின் தடையால் சிக்கித் தவித்த கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.
கொடைக்கானலில் இந்த ஆண்டு அதிக அளவு காட்டுத்தீ பற்றி வருகிறது. வனப்பகுதி மட்டுமல்லாது குடியிருப்பு பகுதியிலும் அடிக்கடி காட்டுத்தீ பற்றி எரிந்து வருவதால் பொதுமக்கள், சுற்றுலாபயணிகள் அச்சமடைந்துள்ளனர். காட்டுத்தீயை கட்டுபடுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.