திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைக்கு அடுத்தபடியாக உள்ள முக்கிய சுற்றுலா தளமாக அறியபடுவது தான் இந்த சிறுமலை .
இந்த மலையானது கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின் தென் பகுதியின் கடைசி மலை என கூறுகின்றனர் .
மேலும் இராமாயண காலத்தில் அனுமன் தூக்கி சென்றதாக கூறப்படும் சஞ்சீவனி மலையில் இருந்து சிதறி விழுந்த சிறு பகுதி எனவும் , இந்த மலையில் இன்றும் சஞ்சீவினி மூலிகை உட்பட பல அரிய மூலிகைகளை தன்னிடத்தில் கொண்டுள்ளது என்று இப்பகுதியில் வாழ்ந்து வரும் பூர்வகுடிகளாக அறியப்படும் பளியர் இன மக்கள் கூறுகின்றனர் .
இவ்வளவு ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த சிறுமலை என்னும் பொக்கிஷம் கொரோனா நோய் தொற்று காலத்தில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாட்டின் போது அழிய துவங்கியது என கூறுகின்றனர் சிறுமலை வாசிகள் .
வெளியூர் நபர்களின் நிலம் வாங்கும் ஆசை , பணத்தாசை பிடித்த அதிகாரிகள் வர்க்கம் , இதற்காக காத்து கொண்டிருந்த முக்கிய அரசியல் புள்ளி , உள்ளூர் இடை தரகர்கள் அனைவரும் சேர்ந்து அரசுதுறை அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு , உள்ளூர் முக்கிய அரசியல் புள்ளியின் பணம் சம்பாதிக்கும் வெறி ஆகியவற்றாால் இந்த மலை முழுவதும் சமீப கால ஆக்கிரமிப்புகளால் நிறைந்து வழிகின்றது.
சிறுமலை மலைபகுதிகளுக்குள் ஜேசிபி , கிட்டாச்சி , போர்வெல் , பாறை உடைக்கும் வாகனங்கள் என எங்கும் அணிவகுத்து நிற்கின்றன இந்த மலையை அழிப்பதற்கு.
அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் வனத்துறை இடங்களை புதுப்புது நபர்கள் ஆக்கிரமித்து (அல்லது ) பழைய ஆக்கிரமிப்பாளர்களிடம் விலைக்கு வாங்கி பாறைகளை உடைத்து , ஜேசிபி கிட்டாச்சி வாகனங்களை கொண்டு சமப்படுத்தி போர்வெல் போட்டு கட்டிடம் கட்டி வருகின்றனர்.
இதற்கென தனி கூட்டமே இயங்கி வருகின்றது என உள்ளூர் மக்கள் புலம்பி வருகின்றனர் . எதிர்த்து கேள்வி கேட்டால் உள்ளூர் முக்கிய அரசியல் புள்ளியின் ஒப்பந்த வாகனங்கள் தான் இவை என்றும் அரசு துறைக்கு புகார் கொடுத்தால் புகாரை பெற்ற அதிகாரிகளே புகார் கொடுப்பவரின் தகவல்களை கூறிவிடுகின்றனர் எனவும் சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகின்றார்.
இன்னும் சில ஆண்டுகள் இதே நிலை நீடித்தால் திண்டுக்கல்லின் அடையாளங்களில் ஒன்றான மலைக்கோட்டையை போன்று காங்ரீட் மலையாக இந்த சிறுமலை மாறிவிடும் என கூறுகின்றனர்.
இத்தனைக்கும் இந்த சிறுமலை மலைத்தொடர் மலைகள் பகுதி பாதுகாப்பு ஆணையம் (HACA COMMITTEE) -ன் பட்டியலிலும் , திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை தலைவரா கொண்டுள்ள மலைகள் பாதுகாப்பு குழுவின் கண்காணிப்பிலும் , மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் ஆணையின்படி மாதம் ஒரு முறை திண்டுக்கல் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் பார்வையிட்டு வருகின்றார் .
இவ்வளவு பாதுகாப்பு நிறைந்த இந்த மலை கண் முன்னே அழிந்து வருவதை கண்டும் காணாமல் அனைத்து துறை அதிகாரிகளும் உள்ளனர் . புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுபபதில்லை என சமூக / வன ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
விடியோ இணைப்பில் : ஜேசிபி அனுமதி கடிதம் RTO – விடம் தான் கேக்கணுமாம்