தமிழ்நாட்டிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக உள்ளது கரூர் லோக்சபா தொகுதி. கரூர் மக்களவைத் தொகுதியில் முக்கிய வேட்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி, அதிமுகவின் தங்கவேல், பாஜகவின் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சியின் கருப்பையா ஆகியோர் களத்தில் உள்ளனர். தற்போதைய கள நிலவரப்படி கரூரில் திமுக – அதிமுக – பாஜக இடையே போட்டி கடுமையாக உள்ளதாக கூறப்படுகிறது.
திமுகவில் தொகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்டோரின் களப்பணியுடன், வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் ஜோதிமணி இருக்கிறார். தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் ஜோதிமணி.
இந்நிலையில், இன்று கரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி திடீரென மயங்கி விழுந்துள்ளார். கடும் வெயிலின் தாக்கத்தால் பிரச்சாரத்தின்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார் ஜோதிமணி. இதையடுத்து, அவருக்கு தண்ணீர் கொடுத்து ஓய்வெடுக்க செய்துள்ளனர். வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் வேட்பாளர் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.