நெல்லை: இன்று காலை பாளையங்கோட்டை லயோலா கான்வென்ட் பள்ளியில் எல்கேஜி அட்மிஷன் விண்ணப்பம் வழங்கப்பட்ட நிலையில் நேற்று இரவிலிருந்தே பள்ளியின் வாசலில் நீண்ட வரிசையில் நள்ளிரவிலும் நடுரோட்டில் கொசுக்கடியில் படுத்திருந்த பெற்றோர்கள்
தமிழகத்தில் இன்னமும் கோடை விடுமுறையே தொடங்காத நிலையில் பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கையே தொடங்கி விட்டது. இதையடுத்து தங்கள் பிள்ளைகளுக்கு அட்மிஷன் பெற பெற்றோர்கள் பள்ளிகளை நாட தொடங்கி விட்டனர்.
தமிழகத்தில் புற்றீசல்கள் போல பள்ளிகள் பெருகிவிட்டாலும் குறிப்பிட்ட சில பள்ளிகளையே பெற்றோர்கள் தொடர்ந்து நாடி வருகின்றனர்.
மாணவர் சேர்க்கை: தங்கள் மாவட்டத்திலேயே மிகப்பெரிய பள்ளியாக இருக்க வேண்டும் கண்டிப்புடன் மாணவர்களை படிக்க வைக்க வேண்டும் என பல்வேறு பள்ளிகளை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொண்டு சில தனியார் பள்ளிகளும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதும் தொடர்கதையாகி வருகிறது. திரைப்படங்களில் வருவது போல பள்ளிகளில் விடிய விடிய காத்திருந்து அப்ளிகேஷன் ஃபார்ம்களை வாங்க காத்திருக்கும் நிலையும் தற்போது தொடர்கிறது. காத்திருந்த பெற்றோர்: ஒரு கல்வியாண்டு முடிவதற்கு முன்னதாக
மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது: நுழைவுத் தேர்வு வைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான பள்ளிகள் இதனை பின்பற்றுவதில்லை. எல்கேஜி யுகேஜிக்கு கூட தங்கள் மகனுக்கு குறிப்பிட்ட பள்ளியில் சீட் கிடைப்பதற்காக பள்ளி வாசல்களிலேயே தவம் கிடக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் நெல்லையில் நடந்துள்ளது
பெற்றோர்கள் ஆர்வம்: இன்று காலை பாளையங்கோட்டை லயோலா கான்வென்ட் பள்ளியில் எல்கேஜி அட்மிஷன் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இந்தப் பள்ளியில் தான் விண்ணப்பங்களை பெறுவதற்காக நேற்று இரவில் இருந்தே பெற்றோர்கள் பள்ளி வாயிலில் கால்களுக்கு காத்திருந்தனர். ஒரு சிலர் அங்கேயே படுத்தும் தூங்கிவிட்டனர்.
இன்று காலை 9.30 மணிக்கு பள்ளியின் கதவுகள் திறக்கப்பட்ட போது பெற்றோர்கள் திபு திபு என உள்ளே குவிந்தனர். நெல்லையில் மிகப் பிரபலமான அந்தப் பள்ளியில் சீட் பெறுவதற்கு பெற்றோர்களிடையே அதிக போட்டி உள்ளது. என்ன காரணம்?: நெல்லையில் உள்ள பள்ளிகளிலேயே இந்த பள்ளி சிறந்த பள்ளி எனவும் 12ஆம் வகுப்பு வரை இருப்பதால் இன்னும் 15 ஆண்டுகளுக்கு வேறு எந்த பள்ளியையும் தாங்கள் நாடத் தேவையில்லை என்பதால் அந்த பள்ளி முன்பு காத்திருப்பதாக பெற்றோர்கள் கூறினர். மேலும் அட்மிஷன் பெற அதிக போட்டி இருக்கும் என்பதால் பல மணி நேரங்கள் காத்திருந்து அட்மிஷன் ஃபார்ம்களை வாங்கிச் சென்றதாகவும் அவர்கள் கூறினார். தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அப்ளிகேஷன்களை வாங்கிச் சென்றனர். அப்ளிகேஷன் ஃபார்ம்களை வாங்குவதற்கே இந்த பில்டப்பா என சில பெற்றோர்கள் முணுமுணுத்ததையும் கேட்க முடிந்தது