கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குள் வருகிறது கல்வராயன் மலை. அந்த கல்வராயன் மலைப்பகுதியில் இருக்கும் 15 ஊராட்சிகளின் கீழ் 144 கிராமங்கள் இருக்கின்றன.
அங்கு ஆண், பெண் என மிகச் சரியாக 35,000 வாக்காளர்கள் இருக்கின்றனர். இங்கு தகவல் தொடர்பு வசதிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், இது காடுகள் நிறைந்த பகுதிகள் என்பதால் பல நேரங்களில் உடனடியாக தொடர்பு கொள்ளாத நிலை நீடித்து வருகிறது.
அதனால் மக்களுக்கு மட்டுமல்ல, அந்த பகுதியில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கும் அவ்வப்போது சிரமங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக தேர்தல் நேரங்களில், இந்த பிரச்னை அதிகமாக வெளிப்படும். வாக்குப்பதிவு நடைபெறும் அன்று, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவாகும் வாக்கு விவரங்களை, இரண்டு மணி நேரங்களுக்கு ஒருமுறை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
ஆனால் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலிலும், அடுத்த வந்த உள்ளாட்சித் தேர்தலிலும், வாக்குப்பதிவு விவரங்களை மாவட்ட நிர்வாகத்தால் உடனுக்குடன் அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது.இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்த பிரச்னைக்கு தீர்வு காண நினைத்த கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன் குமார், தகவல் தொடர்பில் பிரச்னை இருக்கும் வாக்குச்சாவடிகளை கணக்கெடுக்க உத்தரவிட்டார்.
அதன்படி கல்வராயன் மலைப் பகுதியில் இருக்கும் 38 வாக்குச்சாவடிகளில், 24 வாக்குச்சாவடிகளில் தகவல் தொடர்பில் சிக்கல் இருப்பது தெரியவந்தது.அந்த 24 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளே, வாக்கி டாக்கி வசதிகள் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
அதையடுத்து அந்த 24 வாக்கி டாக்கிகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று, இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தேர்தல் நடத்தும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு வாக்குப்பதிவு விவரங்கள் துல்லியமாக வெளியிடப்பட்டன. மாவட்ட ஆட்சியரின் இந்த முயற்சிக்கு, பொதுமக்கள் தரப்பில் வரவேற்பு கிடைத்திருக்கிறது.