திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மலை பகுதி கிழக்கு தொடர்ச்சி மலைகளில் மிக முக்கியமான பகுதியாகவும் , இந்த கிழக்கு தொடர்ச்சி மலைகளின் தென்பகுதி கடைசி மலை ஆகும் .
மேலும் இராமயண கால புராணத்துடன் தொடர்பு உள்ள மலை இது என்றும் இந்த மலையில் எங்கும் கண்டிராத பல மிக அரிதான மூலிகை தாவரங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது .
இவ்வளவு தொன்மை வாய்ந்த இந்த மலையில் சமீப காலமாக நடந்து வரும் பல்வேறு முறைகேடுகளால் மொத்த சிறுமலையும் , இவற்றில் உள்ள மூலிகை தாவரங்கள் , வன உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன .
ஏற்கனவே பல்வேறு வன உயிரின இனங்கள் , மூலிகை தாவரங்கள் , மரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் கூடியே விரைவில் முற்றிலும் அழிந்துவிடும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
இந்த மலையை காப்பாற்ற போதுமான நிதி இல்லை என்றும் அதற்காக சிறுமலை ஊராட்சியும் , சிறுமலை வனச்சரகமும் இணைந்து சுற்றுசூழல் மேம்பாட்டு குழு என்ற பெயரில் சிறுமலை அடிவாரத்தில் உள்ள வன சோதனை சாவடியின் வழியாக செல்லும் அனைத்து வகை வாகனங்களுக்கும் ரூபாய் 20 முதல் 200 வரை கட்டணமாக வசூலித்து வருகின்றனர் .
மாதம் சில லட்சங்களில் வரும் வருமானம் முழுவதுக்கும் சுற்று சூழல் தொடர்பான எந்த பணியும் செய்யாமல் வெறும் செலவு கணக்கு மட்டுமோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையில் செலவு கணக்கு மட்டும் காட்டப்பட்டு வருமானம் முழுவதும் மடை மாற்றப்படுவதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் , வனப்பரப்பளவை அதிகப்படுத்திடவும் , வன உயிரின உணவு மற்றும் உறைவிட தேவைகளுக்காகவும் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது . இதற்காக மத்திய மாநில அரசுகள் பல கோடி ரூபாய்களை ஒவ்வொரு மாவட்ட வனத்துறைக்கும் வழங்கி வருகிறது.
இவை அனைத்தையும் தாண்டி வன விலங்குகளுக்கு உணவு கிடைக்காமல் சிறுமலை விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் பழங்கள் , காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களை ரோட்டில் வந்து உண்டு உயிர் வாழ்ந்து வருகின்றன.
வன சோதனை சாவடி பெயரளவில் செயல்படுவதால் பாலீத்தின் கழிவுகள் சிறுமலை சாலை ஓரங்களிலும் , சுற்றுலா பணிகள் & மதுபிரியர் கள் அமரும் இடங்களிலும் அதிக அளவில் சேர்ந்து வருகின்றது.
இந்த நிலையில் சிறுமலை செல்லும் சாலையில் குரங்கு ஒன்று பாலித்தீன் பை ஒன்றை சாப்பிடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் பரவி சிறுமலை ஊராட்சி மற்றும் வனத்துறையினரின் மெத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது .
வரும் நாட்களிலாவது உள்ளாட்சி அமைப்பும் , வனத்துறையும் கிடைக்கின்ற நிதியை முறையாக பயன்படுத்தி , வன சோதனை சாவடியை உருவாக்கப்பட்ட நோக்கத்தின் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வந்து வனத்தையும் வன உயிரினங்களையும் காக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்