சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமிர்தா சேகோ எனும் தொழிற்சாலை உள்ளது. இதன் உரிமையாளர் குழந்தை வேலு. இவருக்கு ஹேமா என்கிற மனைவியும் சக்திவேல் என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் சக்திவேல் பி.டெக் எம்.பி.ஏ படித்து முடித்துவிட்டு, தனது தந்தையின் தொழிலை கவனித்து வருகிறார். இவர்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் மாடர்ன் ரைஸ்மில் ஒன்றும், ஆத்தூரில் அமிர்தா சேகோ மில் ஒன்றும் இயங்கி வருகிறது. கடந்த ஐந்து வருட காலமாக ஆத்தூரில் உள்ள சேகோ தொழிற்சாலையை சக்திவேல் தான் கவனித்து வந்துள்ளார்.
இதற்கிடையில் சக்திவேலுக்கும் தொழில் ரீதியான கடன் பிரச்னை நிலவி உள்ளது. இதனால் அதிக கடன் வெளியில் வாங்கியுள்ளார். இந்த விஷயம் அவரின் தந்தை குழந்தை வேலுக்கு தெரியவரவே இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. அதிக கடன் காரணமாக ஆத்தூரில் உள்ள மில் தொடர்பாக குழந்தைவேலு கண்டும் காணாதவாறு இருந்து வந்துள்ளார். இதனால் மில்லில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு சம்பளம் கூட போட முடியாத நிலை ஏற்பட்டு வந்துள்ளதுஒரு கட்டத்தில் சக்திவேல் ரைஸ் மில்லினை தன்வசம் கொண்டுவர முயற்சி செய்துள்ளார். ஆனால் அதில் குழந்தை வேலுவுக்கு 50 சதவிகித ஷேரும், குழந்தை வேலுவின் மாமனார் சுந்தரம் என்பவருடைய ஷேரும் இருந்து வந்துள்ளது. வங்கி கணக்குகள் முழுவதும் குழந்தைவேலுவின் பெயரில் இருப்பதால், சக்தவேல் அதிருப்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சக்திவேல் கடந்த 16.02.2024 அன்று பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள திண்ணையில் குழந்தைவேலு அமர்ந்திருந்த போது, சக்திவேல் குழந்தைவேலுவை தனது இரண்டு கைகளால் முகத்தில் குத்தி கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் குழந்தைவேலுவின் மனைவி ஹேமா மற்றும் வேலையாட்கள் சக்திவேலினை வந்து பிடித்துள்ளனர். ஆனால் அவர் கடைசி வரையிலும் மீண்டும் மீண்டும் வந்து குழந்தைவேலுவை கொலைவெறி நோக்கத்துடன் தாக்கியுள்ளார்.பின்னர் பலத்த காயமடைந்த குழந்தைவேலு திருச்சி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து கைகளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எஸ்.ஐ பழனிசாமி ஒருபக்கம் விசாரணை நடத்தி வந்துள்ளார். பின்னர் சிகிச்சை முடிந்து வந்த குழந்தைவேலு தனக்கும், தன் மகனுக்கும் உள்ள பிரச்னையை தாங்களே பேசி முடித்துக் கொள்வதாக எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வந்த இரண்டு நாட்களில் குழந்தைவேலு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் குழந்தைவேலுவை 16.02.2024 அன்று சக்திவேல் தாக்கியது, அவர்களது வீட்டில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதன் மூலம் கைகளத்தூர் போலீஸார் சக்திவேலினை கைது செய்து மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட பத்து ரூபாய் இயக்க வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்து கொண்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை
பெரம்பலூர் மாவட்டம், கைகளத்தூர் காவல் நிலையம், கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல் த/பெ அத்தியப்ப கவுண்டர் என்பவரிடம் அவரது மகன் சக்திவேல் என்கிற சந்தோஷ் என்பவர் சொத்தைப் பிரித்து கொடுக்குமாறு அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளார்.இருவரும் தனித்தனியாக வெவ்வேறு ஊர்களில் வசித்து வந்தனர்.
கடந்த 16. 02 .2024 ஆம் தேதி சக்திவேல் அவரது தந்தை குழந்தைவேலை சொத்துப் பிரச்சினை தொடர்பாக கையாலும் காலாலும் முகத்திலும் உடம்பிலும் கடுமையாகத் தாக்கியுள்ளார். காயம்பட்ட குழந்தைவேல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நான்கு நாட்களில் வீடு திரும்பி உள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பாக குழந்தைவேல் தனது மகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை. எனவே அவர் தனது மகன் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உதவி ஆய்வாளரிடம் எழுத்து மூலமாக தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் இரண்டு மாத காலம் தந்தை மகனுக்கு இடையே எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இருந்து வந்துள்ளனர். சொத்தையும் தனது மகனுக்கு கொடுக்க தந்தை ஏற்பாடு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில்17.04.2024ஆம் தேதி தனது படுக்கையறையில் உள்பக்கமாக தாளிட்டுக் கொண்டு படுக்கைக்கு சென்ற குழந்தைவேல் எதிர்பாராத விதமாக 18.04.2024 ஆம் தேதி அறைக்குள் இறந்து கிடந்து உள்ளார்.
வழக்கம் போல காலை 05.30 மணிக்கு எழுந்திருப்பவர் படுக்கை அறையில் இருந்து வெளியில் வராத காரணத்தினால் அவரது மனைவி ஹேமா என்பவர் கதவைத் தட்டிப் பார்த்து உள்ளார். திறக்கவில்லை என்பதால் வேலையாட்களை கூப்பிட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குழந்தைவேல் குப்புற படுத்த நிலையில் விழுந்து கிடந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, உடனடியாக சம்பவ இடம் சென்று, பிரேதத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் உடலில் வெளி காயங்கள் எதுவும் இல்லை எனவும் இறப்பிற்கு ஹார்ட் அட்டாக் காரணமாக இருக்கலாம் எனவும் உடல் உள்ளுறுப்புகளை ஆய்வு செய்த பின் இறுதி அறிக்கை தருவதாகவும் கூறியுள்ளார்
இந்நிலையில் 16.2.2024 ஆம் தேதி தந்தை குழந்தைவேலை அவரது மகன் சக்திவேல் தாக்கிய சிசிடிவி கேமரா வீடியோ மாவட்ட காவல் துறையினருக்கு 25.4.24 அன்று கிடைத்துள்ளது.
அதன் அடிப்பையில் காவல்துறையினர் உடனடியாக (25.4.24 ) மேற்படி சம்பவத்தில் வழக்கு பதிவு செய்து, மகன் சக்திவேலை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
மேலும் இறந்த குழந்தைவேலின் தந்தை அத்தியப்ப கவுண்டர் என்பவர் 24.04.2024ம் தேதி சக்திவேல் தன்னையும் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்க வந்து, கொலை மிரட்டல் விடுத்ததாக 25.4.24 ்அன்று கொடுத்த புகாரின் பேரில் கைகளத்தூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்ட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்திய உதவி ஆய்வாளர் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மேற்படி வீடியோவில் காணப்பட்ட தாக்குதல் காயங்களுக்கும இறப்பிற்கும் தொடர்பு இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறி இருப்பினும், போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் குழந்தைவேல் இறந்தது தொடர்பாக வெவ்வேறு விதமான தகவல்கள் பரவி வருவதால், பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் இச்சம்பவம் குறித்து இவ்வாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது