முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலத்தீவுக்கு சென்று ஓய்வு எடுப்பதாக தகவல் வெளியான நிலையில் கொடைக்கானல் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் மு.க.ஸ்டாலின் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு வருகை தருகிறார். வருகிற மே 4-ந்தேதி வரை இங்குள்ள தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் இடங்கள், ரோடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் தலைமையில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி, டி.ஐ.ஜி. அபிநவ், எஸ்.பி. பிரதீப், கொடைக்கானல் ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்
2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்பு ஓய்வுக்காக மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் 1 வாரம் தங்கினார். பின்னர் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று தமிழக முதலமைச்சரானார். பாராளுமன்ற தேர்தலிலும் இதே போன்ற வெற்றியை பெற வேண்டும் என்று சென்டிமெண்டாக அதே விடுதியில் தங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் வருகையை முன்னிட்டு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் அவர் தங்கும் விடுதி மற்றும் அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.