குஜராத் கடற்பகுதியில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகை இந்திய கடலோரக் காவல்படை பறிமுதல் செய்துள்ளது.
குஜராத் அருகே அரபிக்கடலில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து நேற்றிரவு அந்த வழியாக வந்த பாகிஸ்தான் படகை சுற்றிவளைத்து இந்திய கடலோர காவல்படை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு, குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு இணைந்து சோதனை மேற்கொண்டன.
அப்போது படகில் 86 கிலோ போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டன. உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் படகில் இருந்த 14 பாகிஸ்தானியர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை போர்பந்தருக்கு அழைத்து வந்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.600 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் படகில் இருந்து என்ன வகையான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பதை கடலோர காவல்படை இன்னும் வெளியிடவில்லை.