ஷாங்காய்: உலக கோப்பை வில்வித்தை ‘ரீகர்வ்’ பிரிவில் 14 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி தங்கம் வென்றது.
சீனாவின் ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை (‘ஸ்டேஜ்-1’) தொடர் நடந்தது. ஆண்கள் அணிகளுக்கான ‘ரீகர்வ்’ பிரிவு அரையிறுதியில் இந்தியா, இத்தாலி அணிகள் மோதின. இதில் திராஜ், தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் அடங்கிய இந்திய அணி 5-1 என வெற்றி பெற்றது.
அடுத்து நடந்த பைனலில் இந்தியா, ‘நடப்பு ஒலிம்பிக் சாம்பியன்’ தென் கொரியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 5-1 (57-57, 57-55, 55-53) என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
பெண்களுக்கான தனிநபர் ‘ரீகர்வ்’ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் தீபிகா குமாரி 6-0 என தென் கொரியாவின் நாம் சுஹ்யோனை வீழ்த்தினார்.
அடுத்து நடந்த பைனலில் ஏமாற்றிய தீபிகா 0-6 என தென் கொரியாவின் லிம் சிஹ்யோனிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
கலப்பு இரட்டையர் ‘ரீகர்வ்’ பிரிவு 3வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் அன்கிதா பகத், திராஜ் ஜோடி 6-0 என மெக்சிகோவின் மதியாஸ், வாலன்சியா ஜோடியை வீழ்த்தி வெண்கலம் வென்றது. இத்தொடரில் இந்தியாவுக்கு 5 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 8 பதக்கம் கிடைத்தன.