ஊட்டி போக போறீங்களா…? இதை படிச்சிருங்க….
“அடிக்கிற வெயிலுக்கு ஊட்டி போய் சில் பண்ணுவோம் ப்ரோ” ன்னு உங்களை யாரேனும் கூப்பிட்டால் அது உங்கள் கிட்னியை உருவுவதற்கான code word என்றறிக. அதுவும் குடும்பத்தோடு என்று சொன்னால்… அடுத்த கிட்னியும் காணாமல் போக போகிறது என்று பொருள்.
மேட்டுப்பாளையம் தாண்டி.. ஊட்டி கோத்தகிரி பிரிவுக்கு முன்னிருக்கும் பவாணி ஆற்று பாலத்தை கடக்கும் போதே… வறண்டு கிடக்கும் ஆறு அபாய சங்கை ஊதி விடுகிறது.. செத்தாதான் மேல போவாங்க… நீ மேல போனாலும் செத்த.. என அது கொடுக்கும் எச்சரிக்கையையும் மீறி மேலே ஏறுகிறோம். இல்லை… இல்லை.. ஆல்ரெடி மேலே ஏற காத்திருக்கும் வாகனங்களின் அணிவகுப்பில் நாமும் இணைந்து கொள்கிறோம்.
ஏதோ ஒரு பேரணி போல மெல்ல மெல்ல ஊறி… டிசம்பர் மாத பனி புகையினை தரிசித்த கண்கள்… முன்னே செல்லும் வாகனங்களின் டீசல் புகையின் வீச்சை தாங்க இயலாமல் கலங்குகின்றன. மேலே போக போக சூரியனுக்கும் நமக்கும் உள்ள இடைவெளி குறைந்து உச்சி வெயில் மண்டையே பிளக்க ஆரம்பிக்க.. காரில் ஏ.சி யை நான்கிற்கு திருப்புகிறோம். எதேனும் இடத்தில் ஓரம் கட்டி.. கட்டிக்கொண்டு வந்த இட்லியை பிரித்த வேகத்தில்.. குரங்கார்கள் அதன் மீது உக்கிரமாக பாய்கிறார்கள்.
அடேய்… இது ஊட்ல செஞ்சதுடா… ஹோட்டல்ல வாங்குனது இல்ல… அவ்வளவு ருசியா எல்லாம் இருக்காதுடா என நாம் சொல்வதற்குள்.. தட்டில் வைத்த இட்லியோடு காணாமல் போகிறார்கள்.
ஊட்டியை நெருங்கியதும், முதலில் நம்மை திணற வைப்பது ட்ராபிக். கால் வைக்கும் இடங்களில் எல்லாம் கண்ணி வெடி இருப்பது போல.. ஒன் வே…., நோ என்ட்ரி, டேக் டைவர்சன் போர்டுகள் சுற்றி சுற்றி நம்மை குழப்பி அடிக்க.. மூலவரை பார்க்கறதுக்கு முன்னாடி புள்ளையாரை மூணு சுத்து சுத்துவது போல.. ஊட்டி ரவுண்டாணாவை எதற்கு சுத்துகிறோம் என தெரியாமலேயே மூன்று சுற்றுக்கள் சுற்றுகிறோம்.
அப்படியும் போக வேண்டிய இடத்தை நெருங்கி விட்டாலும்… அதை விட பெரிய பிரச்சனை பார்க்கிங் கிடைப்பது. கல்யாணம் செய்யும் வயசு வந்தாலும் பொண்ணு கிடைக்காமல் அல்லாடுவது போல… ஒரு பார்க்கிங் ஸ்பேஸ் கிடைக்க கண்டபடி அல்லாடுகிறோம். மறுபடியும் ரவுண்டாணாவை ரெண்டு சுற்று. ப்ரைவேட் பார்க்கிங் ஸ்லாட்டுகளில் மணிக்கு 80ல் இருந்து 100 வரை, நம் முகத்தில் ஓடும் இளிச்சவாய களைக்கு தகுந்தபடி வசூலிக்கிறார்கள்.
யப்பா… ஒருவழியா பார்க்கிங் கிடைச்சது… கார்டனுக்கு எப்படி போகணும் என வழி கேட்டால்… அது ஒரு கிலோ மீட்டர் தள்ளியில்ல இருக்குது. ஒரு ஆட்டோ வச்சு போயிக்குங்க என கொலை காண்டு ஏற்றுகிறார்கள். “அடேய்… காரை வச்சுக்கிட்டு நான் ஏண்டா ஆட்டோவில போகணும்” என நமக்கு நாமே கேட்டுக்கொண்டு நடந்தே கார்டனை அடைகிறோம்.
. டிக்கெட் கவுண்டரில் வரிசை நின்று… கார்டன் உள்ளே நுழைந்து, ஸ்ப்ப்ப்பா ஒரு ஓரமா உட்காரலாம் என புல்லின் மேல் அமர்ந்தால்… எங்கிருந்தோ ஒரு அக்கா விசில் அடிக்கிறார்கள். அடடே.. என ஆர்வமாய் திரும்பினால்… “ஆல்ரெடி அது கருகி கிடக்குது… எந்திரிச்சு போப்பா..” என விரட்டுகிறார்கள். உட்கார இடம் இல்லை… வெறுக்கு வெறுக்கு என கூட்டம் வியர்வையில் நனைந்தபடி அங்கிட்டும் இங்கிட்டும் அலை பாய்கிறது.
புழுதி பறக்கிறது. சில அப்பாவி குடும்பஸ்தன்கள் இதுக்கு மேல தாங்காது என கிடைத்த இடத்தில் துண்டை விரித்து படுத்து விடுகிறார்கள். டீக்கடை அக்காவிடம் பேசும்போது… தண்ணீருக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதை புரிந்து கொள்ள முடிகிறது.
“சிவாஜி… நீ திரும்ப அமெரிக்காவுக்கே போய்டு” என்பது போல.. நாம கோவைக்கே திரும்ப போயிடுவோம் என வண்டியை கிளப்பி கீழே வந்தால்.. வெலிங்கடனில் இடை மறித்து.. இடது பக்க கண்டோன்மென்ட் சாலையில் நம்மை மடை மாற்றி விடுகிறார்கள். பொருத்தமாய்… காரின் ஆடியோ சிஸ்டத்தில் ” எங்கே செல்லும் இந்த பா………..தை என ராஜாவும் அழ ஆரம்பிக்கிறார்.
மதிய உணவுக்கு… ரீல்ஸ் பார்த்து குன்னூர் ராமசந்திரா ஹோட்டலுக்கு போனால்… அங்கேயும் அதே பார்க்கிங் பிரச்சனை.. மறுபடியும் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள பெய்ட் பார்க்கிங்கில் வண்டியை சொருகி விட்டு சாப்பிட வந்தால்… அது ஒரு தனி பதிவாய் போடும் அளவிற்கு சோகம்.
சரி… வேகமாய் கீழே இறங்கலாம் என குன்னூரில் லெப்ட் ஒடிக்கும்போதே… வந்தது வந்துடீங்க.. கோத்தகிரி வழியா போய் அதையும் சுத்தி பார்த்துட்டு போய்டுங்க என நம்மை கோத்தகிரி பாதைக்கு திருப்பி விடுகிறார்கள். 22 கிலோமீட்டர்கள் எக்ஸ்ட்ராவாய் இறங்கும்போதும்… அதே பேரணி… அதே டீசல் புகை.
அப்பாவி குடும்பஸ்தர்கள் ஊட்டிக்கு போக…ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து, டயருக்கு கீழே எலுமிச்சை பழம் வைக்கவும். அதுவும் விடுமுறை தினங்களை சர்வ நிச்சயமாய் தவிர்த்து விடவும். ஏனெனில் ஊட்டி அழகாய் இருப்பது நிச்சயம் கோடை காலத்தில் அல்ல… மூன்றாம் பிறை படத்தில் வரும் அழகான ஊட்டியை காண நீங்கள் குளிர்காலம் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் இப்போதோ, அவசரத்தில் மேக்கப் போடாமல் எதிரே வந்த தமிழ் சினிமா ஹீரோயினை போல கருகி போய்… காய்ந்து போய் கிடக்கிறாள் மலைகளின் ராணி.
அப்ப… நான் சம்மருக்கு என்னதான் பண்றது என கேட்பவர்களுக்கு… ஊட்டி போய் வர செலவாகும் பணத்தை இனிஷியல் அமௌன்ட்டாய் போட்டு emi யில் ஒரு ஏசி எடுத்து மாட்டி விடவும். அட்லீஸ்ட்.. மிச்சமிருக்கும் மே மாச அக்னி வெயிலை எதிர்கொள்ள ஏதுவாய் இருக்கும்.