“கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ரோஷினி தேவி. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த தமிழரசன் என்ற இளைஞர் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்துவரும் நிலையில், இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
“தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ரோஷினி தேவி ஒவ்வொரு முறை தமிழரசனிடம் கூறி வந்தபோது, தமிழரசன் தட்டிக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவிடுவாரோ என்ற அச்சத்தில் ரோஷினி தேவி உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இருவரை அழைத்து போலீசார் விசாரித்தனர். பின்னர், சுமூகமான முடிவை எடுக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.
“இதனிடையே, தமிழரசனை பெண் வீட்டார் அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்துச்சென்று ரோஷினி தேவியை திருமணம் செய்து கொள்ளுமாறு 2 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்து தமிழரசன் அந்த இடத்தை விட்டு வெளியேற முயன்றார். எனினும், பெண் வீட்டார் தமிழரசனை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்து இளம்பெண்ணுக்கு திருமணம் செய்துவைத்ததாக கூறப்படுகிறது.
“இதையடுத்து, தனக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்ததாக தமிழரசன் போலீசில் புகார் அளித்துள்ளார். தனது கணவரின் உறவினர்களால் தனக்கு ஆபத்து ஏற்படக்கூடும் எனக்கூறி ரோஷினி தேவியும் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மனுக்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. காதலித்து திருமணம் செய்ய மறுத்த வாலிபரை உறவினர்களுடன் சென்று இளம்பெண் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.