உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை வாகன கட்டண மையம் உள்ள பகுதியில் பயணிகளிடம் பழங்கள் மற்றும் தின்பண்டங்கள் கூடைகளில் வைத்து அப்பகுதி மக்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
நெடுந்தூரம் பயணம் செய்து வரும் பயணிகள் தங்களது தேவைகளுக்கு தகுந்தாற் போல் பிடித்த பொருட்களை வாங்கி செல்லும் வழியில் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இந்த இடத்தில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களுக்கு எந்த ஒரு கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பும் இல்லாததால் தரமற்ற / கெட்டுப்போன பழங்கள் , தின் பண்டங்களை குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு விற்று விடுகின்றனர் .
சமீபத்தில் ஒரு வாகன ஓட்டுனர் வாங்கிய முந்திரிபருப்பு பாக்கெட்டை திறந்து பார்த்த போது ஒவ்வொரு முந்திரி பருப்பின் உள்ளேயும் கெட்டு போய் பூஞ்சை வைத்தும் சில முந்திரி பருப்புகளில் புழுக்களும் இருந்துள்ளன .
இதனால் நொந்து போன அந்த வாகன ஓட்டுனர் அதை அப்படியே வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார் .
இந்த வீடியோவை கண்ட சமூக ஆர்வலர்கள் உணவு பாதுகாப்பு துறை , உள்ளாட்சி அமைப்பு மற்றும் இது தொடர்பான அனைத்து துறைகளும் உரிய நடவடிக்கை எடுத்து தரமான உணவு பொருட்கள் இப்பகுதியில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.