மயிலாடுதுறை, தில்லையாடி மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடி கிராமத்தில் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் சத்ரு உபாதைகள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக முற்காலங்களில் நடந்து வந்துள்ளது. தேர் சிதிலமடைந்ததால் கடந்த 40 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.
கிராம மக்களின் முயற்சியால் இவ்வாண்டு முழுவதும் மரத்தால் ஆன தேரோட்டம் இன்று நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தேரோட்டத்தை முன்னிட்டு மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதனை அடுத்து அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள கும்பகோணம் முதன்மை சார்பு நீதிபதி வெங்கடேச பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர் ரங்கராஜ் ஆகியோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க 4 வீதிகளை வலம் வந்தது. வழிநெடுக்க பக்தர்கள் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.