புதுடில்லி: காஷ்மீரில் இந்திய விமானபடைக்கு சொந்தமான வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
சந்தேகிக்கப்படும், 2 பேரின் மாதிரி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தின் சுரான்கோட் பகுதி வழியாக, இந்திய விமானப் படை வீரர்கள் இரண்டு வாகனங்களில் சென்றனர்.
விமானப் படை தளத்துக்கு சென்ற அவர்களது வாகனங்கள் மீது, அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் ஐந்து விமானப் படை வீரர்கள் காயமடைந்தனர்.
அனைவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இத்தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், 2 பேரின் மாதிரி புகைப்படங்களை பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளது.
மேலும் இவர்கள் பற்றி தகவல் தந்தால், 20 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் ரகசியம் காக்கப்படும்.
தங்களைத் தொடர்புகொண்டு தகவல்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய மொபைல் எண்களையும் அதிகாரிகள் வழங்கியுள்ளனர். எண்கள் 9541051982 மற்றும் 8082294375.