உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக மாணவர்கள் வந்து தங்கிப் படிப்பது வழக்கும்.
அந்த வகையில், எட்டாவாவிலிருந்து கான்பூருக்கு ஒரு மாணவர் போட்டித் தேர்வு தயாரிப்புக்காக வந்திருக்கிறார். அவருக்குப் பயிற்சி மையத்தில் சீனியர் மாணவர்களுடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், எட்டாவா மாணவர் சீனியர் மாணவர்களிடம் ரூ.20,000 பணம் பெற்று ஆன்லைன் சூதாட்டம் விளையாடியிருக்கிறார். அதில் அந்தப் பணத்தையும் இழந்திருக்கிறார்.இதற்கிடையில், பணம் கொடுத்த சீனியர் மாணவர்கள் ரூ.20,000 க்குப் பதிலாக ரூ.2 லட்சம் தரவேண்டும் எனக் கேட்டிருக்கிறார்கள். இதனால், அவர்களுக்கு மத்தியில் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இதனால் சீனியர் மாணவர்கள், எட்டாவா மாணவரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று, அவரை கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். அவரது முடிக்குத் தீ வைத்துப் பொசுக்கியிருக்கிறார்கள். மேலும், அவரை நிர்வாணப்படுத்தி, அவரது ஆணுறுப்பில் செங்கல்லைக் கட்டி தொங்கவிட்டுக் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து, இந்தக் கொடுமைகளை மாணவர் அவரின் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். போலீஸாரும் சீனியர் மாணவர்களை அழைத்துக் கண்டித்து அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், எட்டாவா மாணவர் கொடுமைப்படுத்தப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.அதைத் தொடர்ந்து, காவல்துறை தாமாக முன்வந்து ஐ.பி.சி பிரிவுகள் 147, 34, 343, 323, 500, 506, 307 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்து, இந்தக் கொடுமைகளை நிகழ்த்திய சீனியர் மாணவர்கள் ஆறு பேரைக் கைதுசெய்திருக்கிறது.