2 கர்ப்பிணிகளை கண்டு திருப்பூரே திகைத்துப்போய்விட்டது.. யார் இந்த இளம் பெண்கள்? எங்கிருந்து வந்திருக்கிறார்கள்? எங்கே போனார்கள்? என்றே தெரியவில்லையே..!!
திருப்பூர் பஸ் ஸ்டாண்டு எப்போதுமே பரபரப்பாக காணப்படும் இடமாகும்.. இந்த பஸ் ஸ்டாண்டிலிருந்துதான், கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. எனவே, எந்நேரமும் இந்த மத்திய பேருந்து நிலையம், படுபிஸியாகவே காணப்படும். பயணிகளின் நடமாட்டமும் அதிகமாகவே இருக்கும்.
ஆனால், இந்த கூட்டத்தை பயன்படுத்தி, பஸ் ஸ்டாண்டில் பல்வேறு தொல்லைகள் வெடித்து வருகின்றன.. பயணிகளிடம் காசு கேட்டு தொந்தரவு செய்வது, பின்னாடியே விரட்டி விரட்டி சென்று பிச்சை எடுப்பது, குடித்து விட்டு, போதையில் ரகளை செய்வது, பயணிகளின் உடைமைகளை ஆட்டைய போடுவது போன்ற சம்பவங்களில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள்.. இதனை தடுக்க போலீசாரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில்தான், சில நாட்களுக்கு முன்பு 2 பெண்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் சுற்றித்திரிந்து கொண்டேயிருந்தனர்.. இவர்கள் 2 பேருமே கர்ப்பிணிகள் ஆவர்.. பஸ் ஸ்டாண்டிலுள்ள கடைகள் ஒவ்வொன்றுக்கும் சென்று, நிறைமாசம் என்பதால், மருந்து செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்கள்.. கடைக்காரர்களும் பெண்கள் இருவரும் கர்ப்பிணிகள் என்பதால், இரக்கப்பட்டு பணம் தந்தார்கள்.
ஒருசில பயணிகள், இந்த கர்ப்பிணிகளை பார்த்ததுமே, அவர்களாகவே வந்து பணம் தந்துவிட்டு போனார்கள்.. ஆனால், பணத்தை வாங்கிக்கொண்டு அந்த பெண்கள் அங்கிருந்து நகரவேயில்லை.. தினமும் இந்த பஸ் ஸ்டாண்டுக்குள்ளேயே சுற்றி சுற்றி வந்து காசு கேட்டு கொண்டிருந்தார்கள்..
ஒவ்வொரு பஸ்ஸிலும் பிச்சை வாங்கினர்.. பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் குறைந்துவிட்டால், திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றி திரிந்து பொதுமக்களிடம் மருந்து செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளனர். இப்படியே பல நாட்கள் ஆன நிலையில், திருப்பூர் மக்களுக்கே இந்த பெண்கள் மீது சந்தேகம் வந்துள்ளது.
சம்பவத்தன்று வழக்கம்போல், பஸ் ஸ்டாண்டில் காலை பிச்சை எடுப்பதற்காக பெண்கள் 2 பேரும் வேகவேகமாக உள்ளே வந்தார்கள்.. பஸ் ஸ்டாண்டுக்கு உள்ளேயிருந்த எஸ்கலேட்டர் பகுதிக்கு 2 பேரும் நேராக சென்றார்கள்.. இதைப்பார்த்த அங்கிருந்த கடைக்காரர்களும், பயணிகளும், இந்த பெண்கள் பின்னாடியே சென்றார்கள்..
அப்போதுதான், 2 பேருமே வயிற்றில் துணியை சுற்றி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள்.. 2 பேரையுமே கையும் களவுமாக சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர்.
அப்போது பொதுமக்கள் சிலர் அந்த பெண்களை தாக்க முயன்றார்கள்.. “அடிக்காதீங்க, அடிக்காதீங்க” என்று 2 பெண்களும் பதறினர்.
பிறகு, பொதுமக்கள் பிடியிலிருந்து தப்பித்து நைஸாக, அங்கிருந்து நழுவி ஓடிவிட்டார்கள்.. இந்த சம்பவத்தின் வீடியோதான் இணையத்தில் வேகமாக வைரலாக பரவிகொண்டிருக்கிறது.. இத்தனை மாதமும் திருப்பூருக்குள்ளேயே சுற்றித்திரிந்த அந்த பெண்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? எங்கே போனார்கள்? என்றே தெரியவில்லையாம்…!!