அரசியல்செய்திகள்விமர்சனங்கள்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் செயல் இழக்கும் சிசிடிவி கேமராக்கள்.. ஐகோர்ட் உத்தரவு!

தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை நிறுவும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளின் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் நீலகிரி மக்களவை தொகுதியில் உள்ள ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தன. அதேபோல, ஈரோடு, விழுப்புரம் தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களும் சிறிது நேரத்துக்கு செயலிழந்தன.

இதுசம்பந்தமாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் எம் எல் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், கோடை வெப்பம் காரணமாக கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்ததாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கண்காணிப்பு கேமராக்கள் அதிக வெப்பத்தை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அரசியல் கட்சியில் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சந்தேகம் எழுப்பி உள்ள நிலையில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்தது குறித்து உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையம் தரப்பில், கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தது குறித்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. கூடுதல் கேமராக்களை நிறுவும்படியும், எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுபடியும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மனுதாரரின் கோரிக்கை மனுவுக்கு இன்று பதிலளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தேர்தலில் போட்டியிட்டவர்கள் எவரும் வழக்கு தொடராத நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button