நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கிராமத்துக்குள் நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள் அப்பகுதியில் வாழைத் தோட்டங்களுக்குள் புகுந்தன. அங்கு அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்களை முறித்தும், காலால் மிதித்தும் சேதப்படுத்திவிட்டுச் சென்றன.
இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். காட்டு யானைகளால் சேதமான வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பால் தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது . எனவே யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறபடுத்துவதுடன் வனப்பகுதிக்குள் யானைகளுக்கு தேவையான உணவு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்