ஆன்லைன் கேம் விளையாடுவதற்காக நண்பனிடம் இருசக்கர வாகனத்தை இரவல் வாங்கி தாம்பரம் பல்லாவரம் பகுதியில் பட்டபகலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அம்சவள்ளி(45).இவர் கடந்த ஐந்தாம் தேதி சென்னை பல்லாவரத்தில் வீடு வாடகைக்கு பார்ப்பதற்காக பேருந்து நிலையம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது,இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இது குறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் உள்ள குற்றப் பிரிவு போலீசார் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து தப்பிச் சென்ற கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில்,அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது கொள்ளையர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் முன் மற்றும் பின் பக்கம் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது.இதனால் செய்வதறியாது தவித்த போலீசார் கொள்ளையர்கள் தப்பிச் சென்ற திசையில் இருந்த சுமார் 136,க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்த போது கொள்ளையர்கள் வந்த மோட்டார் சைக்கிள் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு தெருவில் போய் நின்றது.அதன் பிறகு அந்த இருசக்கர வாகன குறித்த வேறு எந்த காட்சியும் சிசிடிவி கேமராவில் சிக்காமல் இருந்தது. இதனால் கொள்ளையர்களை தொடர்ந்து அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.
அப்போது அந்த பகுதியில் தீவிரமாக தேடியபோது புரசைவாக்கம் பகுதியில் வாலிபர் ஒருவர் சாலையில் ஹாயாக நடந்து வந்து கொண்டிருந்தார்.அவர் அணிந்திருந்த ஷுவும், இருசக்கர வாகனத்தில் சென்ற கொள்ளையர்களில் ஒருவன் அணிந்திருந்த ஷுவும் ஒத்துப் போகவே,அந்த வாலிபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் கேள்விகளுக்கு அந்த வாலிபர் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார்,அவரை அலேக்காக தூக்கி கொண்டு பல்லாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல் துறையினர் பாணியில் முறைப்படி விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில்,அவர் சென்னை, புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது-19) என்பதும், இவர் சென்னையில் உள்ள பிரபல பல்கலைக் கழகத்தில் பி.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.மேலும்,தனது நண்பரும் தன்னுடன் கல்லூரிகளில் ஒன்றாக படிப்பவருமான சென்னை, வண்ணாரப்பேட்டை சுப்பம்மாள் தெருவை சேர்ந்த முகமதுஅலி (22) ஆகிய இருவரும் சேர்ந்து சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் சேலையூர் பகுதியில் கடந்த 5ஆம் தேதி சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் (சீதாலட்சுமி வயது-40) மற்றும் பல்லாவரம் பகுதியில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் ( அம்சவள்ளி ) ஆகிய இருவரிடம் பட்டப்பகலில் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்தனர்
அதன் பின்னர் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த முகமது அலியையும் போலீஸார் தட்டி எழுப்பி பல்லாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர் மேலும் விசாரித்ததில்
இவர்கள் இருவரும் புரசைவாக்கத்தில் உள்ள நண்பர் ஒருவரிடம் இருசக்கர வாகனத்தை இரவலாக வாங்கி வந்து அதில் இருந்த இரண்டு நம்பர்கள் கழட்டிவிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றதும் கொள்ளை நடந்து முடிந்ததும் எதுவும் தெரியாதது போல் நண்பனிடம் இருசக்கர வாகனத்தை திருப்பிக் கொடுத்ததும் விசாரணை தெரிய வந்தது.
இவர்கள் கொள்ளையடித்த நகைகளை சென்னை சௌகார்பேட்டையில் உள்ள நகை பட்டறை ஒன்றில் நகைகளை உருக்கி விற்பனை செய்து,அதன் மூலம் ஒரு இலட்சத்து 30,ஆயிரம் பணம் பெற்றதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இவ்வாறு கொள்ளையடித்த பணத்தில் கிடைத்த ஒரு லட்சத்தை 30 ஆயிரம் பணத்தில், ஒரு லட்சத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததாகவும், மீதிப் பணத்தை ஜாலியாக செலவு செய்ததாகவும் தெரிவித்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் உருக்கிய நிலையில் ஜந்து சவரன் தங்கத்தை போலீசார் மீட்டனர். கொள்ளையர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை தாம்பரம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு,136 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை திறம்பட கைது செய்த போலீசாரை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.இருந்த போதிலும் சமீப காலமாக சென்னை புறநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது அரங்கேறி வருகிறது. இதற்கு சாலை விதிகளை முறையாக பின்பற்றாமல் மோட்டார் சைக்கிளில் நம்பர் பிளேட் இல்லாமலும், தலைக்கவசம் அணியாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகளை பிடித்து, அவர்களை சோதனை செய்தாலே இது போன்ற குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறையும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.