விபத்து ஏற்பட்ட ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாக பூங்காவை மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.கோவை சரவணம்பட்டி பகுதியில் ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது.
இந்த குடியிருப்பில் வசித்து வரும் பிரசாந்த் என்பவரின் மூத்த மகன் ஜியான்ஸ் ரெட்டி (6), பாலச்சந்தர் என்பவரின் மகள் பிரியா (8) ஆகிய இரு குழந்தைகளும் நேற்று மாலை அங்குள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சறுக்கு விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீஸார், குழந்தைகளின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனைக்கு பின்னரே , அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “குடியிருப்போர் நல சங்கத்தினரின் அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது.
குடியிருப்பு வளாகத்தில் குழந்தைகள் பூங்காவை மேம்படுத்தி இருக்கின்றனர். அப்போது மின் கேபிள்களை கீழே போட்டுள்ளனர். தெருவிளக்கு ஆன் செய்யும்போது மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் இறந்திருக்கின்றனர்.இந்த இடம் மின்வாரிய பொறுப்பு கிடையாது. அவர்களின் பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது. தெருவிளக்கை அவர்கள் தான் பராமரித்து வருகின்றனர்.” என்றனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.