க்ரைம்செய்திகள்

விடியற்காலை நேரம், மிரட்டி வழிப்பறி’ – இரண்டு இளைஞர்களை ‘வளைத்த’ போலீஸ்.. கரூரில் விடியற்காலை வேளையில் அடுத்தடுத்து வழிப்பறி சம்பவங்களை அரங்கேற்றிய கொள்ளையர்களை பிடிக்க நடைபெற்ற வாகன சோதனையில் சினிமாவை மிஞ்சும் சேசிங் சம்பவம் நடைபெற்றுள்ளது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள அம்மா புறவழி சாலையில், அதிகாலை வேளையில் காலை கடனை கழிக்க சென்ற முதியவரை அடித்து, அவரிடமிருந்து அவரின் இருசக்கர வாகனத்தை இரண்டு பேர் அடங்கிய டீம் பிடுங்கிச் சென்றது.

இதுகுறித்து, அந்த முதியவர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவல் அடிப்படையில், கரூர் நகர் பகுதி முழுவதும் போலீஸார் அந்த கொள்ளையர்களை பிடிக்க உஷார்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில், முதியவரிடம் வழிப்பறி செய்த இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி, கரூர் – ஈரோடு சாலை அமைந்துள்ள கோதை நகர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், தனியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம், கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு, மர்ம நபர்கள் இருவர் தப்பித்துச்சென்றதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் சென்றது.

இந்த இரண்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் ஒரே டீமாக இருக்க கூடும் என சந்தேகித்த போலீஸார் இருவரையும் பிடிக்க கரூர் நகர போலீஸார், வாகன சோதனையைத் தீவிரப்படுத்தினர். அப்போது, இரண்டு பேர் சந்தேகத்திற்கிடமாக வாகனத்தில் வந்தபோது, போலீஸார் அவர்களை மடக்க முயன்றனர்.

அப்போது, போலீஸாரைக் கண்டவுடன் அவர்களிடம் இருந்து பிடிபடாமல் இருக்க, வாகனத்தை வேகமாக எதிர் திசையில் சென்றனர்.அப்போது, போலீஸாரும் அவர்கள் இருவரையும் சேஸிங் செய்து துரத்திச் சென்றனர். அதிவேகமாக அவர்கள் இருவரும் சென்றபோது கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

பின்னர், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், அந்த வழிப்பறி கொள்ளையர்கள் இருவரையும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதற்கிடையில், அந்த இருவர் குறித்தும் போலீஸார் நடத்திய விசாரணையில், கரூர் வெங்கமேட்டை சேர்ந்த பரணிபாண்டி, மோத்தீஸ் என தெரிய வந்ததது. பின்னர், கரூர் நகர காவல் நிலையத்தில் போலீஸார் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த பொருட்களை மீட்பதற்காக அழைத்துச் சென்றனர்.

அப்போது, போலீஸாரிடமிருந்து அவர்கள் இருவரும் தப்பிச் செல்ல முயற்சித்து, அருகில் இருந்த பாலத்திலிருந்து கீழே குதித்தபோது, அவர்கள் இருவருக்கும் காலில் எலும்பு முறிவு எற்பட்டது. பின்னர், அவர்கள் இருவரும் மீண்டும் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் இருவருக்கும் மருத்துவர்கள் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர், அவர்களிடம் இருந்து வழிப்பறி செய்த பொருள்கள் மீட்கப்பட்டதோடு, அவர்கள் இருவரும் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

அடுத்தடுத்து வழிப்பறியில் ஈடுப்பட்ட இளைஞர்கள் இருவரை போலீஸார் சேஸிங் செய்து பிடித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button