கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் பகல் நேரத்தில் தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமை சிறுத்தை ஊருக்குள் நடமாடுவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகாவில் உள்ள தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட ஒற்றுவயல் கிராமத்தில் ஊருக்குள் செவ்வாய்க்கிழமை நுழைந்த சிறுத்தை குடியிருப்பு பகுதியிலும் விவசாயத் தோட்டங்களிலும் நடமாடியது.சிறிது நேரம் கழித்து பாக்குத் தோப்புக்குள் சென்று படுத்து ஓய்வெடுத்தது.
இந்நிலையில், இரண்டாவது நாளாக புதன்கிழமையும் அதே சிறுத்தை தேவா்சோலை பகுதியில் உள்ள தேவன் எஸ்டேட் சாலையில் நடமாடியது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பாா்த்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
வனத்துக்குள் செல்லாமல், தொடா்ந்து ஊருக்குள் நடமாடுவதால் சிறுத்தைக்கு உடல் நலம் குன்றியிருக்கலாம் அல்லது வேட்டையாட முடியாத அளவுக்கு காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகிக்கின்றனா்.”