யானை வழித்தடங்களாக குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த இடங்களில் மக்களின் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், தேயிலைத் தோட்டங்கள், தனியார் விடுதிகள் எனப் பலவும் அமைந்திருப்பதல் இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
யானை – மனித மோதல்களைத் தடுப்பதற்காகவும், ஆக்கிரமிப்புகளால் குறுகிவரும் யானை வழித்தடங்களை அதிகரிப்பதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, தமிழகம் முழுக்க 42 யானை வழித்தடங்களை கண்டறிந்து அதற்கான திட்ட வரைவு அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது. மனித செயல்பாடுகளால் யானைகள் உயிரிழப்பதும், யானை – மனித எதிர்கொள்ளலும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. அதேநேரம் கட்டுப்பாடற்ற ஆக்கிரமிப்புகளால் காடுகளின் பரப்பளவு குறைந்து, யானைகளில் வழித்தடங்கள், வலசைப் பாதைகள் துண்டாடப்பட்டு, உணவுக்காக குடியிருப்புகளை நோக்கி யானைகள் படையெடுக்கவேண்டிய சூழலும் உருவாகியிருக்கின்றன.
இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக தமிழ்நாடு அரசு, வனத்துறையின் தலைமை வனப்பாதுகாவலர் வி.நாகநாதன் தலைமையில் ஓர் குழுவை உருவாக்கி ஆய்வு செய்ய அறிவுறுத்தியது. அதனடிப்படையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட குழுவினர் தமிழக யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கையை தயாரித்து சமர்ப்பித்தனர்.
இந்த அறிக்கை கடந்த ஏப்ரல் 29-ம் தேதி தமிழக வனத்துறையால் இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்த வரைவு அறிக்கையில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 42 யானை வழித்தடங்கள் புதிதாக கண்டறியப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தருமபுரி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டம் மசினகுடி, கூடலூர், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட வனக் கோட்டங்களில் இந்த யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன.
` வனத்துறை அறிக்கையில் தெரிவித்திருக்கும்படி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகள் அனைத்தும் வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். நீலகிரி மாவட்டம் மசினகுடி, கூடலூர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இத்திட்டத்துக்கு எதிராக தங்கள் கிராமங்களில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில் தேவர்சோலா- நிலம்பூர், ஓவேலி என இரண்டு யானை வழித்தடங்கள் கண்டறியப் பட்டிருக்கின்றன.
அரசு இந்தப் பகுதிகளை யானை வழித்தடங்களாக அறிவிக்கும் பட்சத்தில் இந்த கிராமங்களில் காலம் காலமாக வசித்து வரும் மக்களின் குடியிருப்புகள், அவர்கள் சார்ந்திருக்கும் விவசாய நிலங்கள், தேயிலைத் தோட்டங்கள் என அனைத்தும் அரசின் வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் என்பதால் கிராம மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களும் இந்தத் திட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கடந்த 2000-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், தமிழ் நாட்டில் 25 யானை வழித் தடங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. 2017-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில், தமிழ் நாட்டில் 18 யானை வழித் தடங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில் 20 யானை வழித் தடங்கள் இருப்பதாகவும், அதில் 15 தமிழகத்திலும், 5 கேரளா மற்றும் கர்நாடகாவில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இறுதியாக, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தமிழகத்தில் சுமார் 42 யானை வழித் தடங்கள் இருப்பதாகக் கணக்கிட்டு 29.4.2024 அன்று ஒரு வரைவு அறிக்கையினை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த வரைவு அறிக்கை குறித்து 5.5.2024 வரை மக்கள் தங்கள் கருத்துகளையும், ஆட்சேபனைகளையும் பதிவு செய்யலாம் என்று காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து முறையான எந்த ஒரு அறிவிப்பும் தமிழ் செய்தி பத்திரிகைகள் வாயிலாகவோ, தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாகவோ வனத்துறையால் வெளியிடப்படவில்லை. யானை வழித்தடம் குறித்து வனத்துறை மேற்கொண்ட ஆய்வுகள் எத்தனை? யானை வழித் தடங்கள் எத்தனை உள்ளன ? என்பது குறித்து முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ள நிலையில்
பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் 20 யானை வழித்தடங்களை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கண்டறிந்துள்ளது. ஆனால், தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு, 42 வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக கூறுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசின் எந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் மாநில அரசு பின்பற்றுவதில்லை!” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.