நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது . இங்கு புலிகள் , சிறுத்தைகள் உட்பட பல்வேறு அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன . அதனால் இந்த பகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கபபட்டுள்ளன .
புலிகள் சரணாலயம் போன்ற மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன . இப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வனத்துறையில் பல்வேறு பிரிவினர் உள்ளனர் . இது மட்டுமல்லாது வனத்துறையில் சில தனிப்படையினரும் உள்ளனர் .
ஆனால் இவ்வளவு கண்காணிப்பையும் மீறி சுற்றுலா பயணிகள் தனி வாகனங்களில் வந்து நடு வன பகுதிக்குள் வாகனங்களை நிறுத்திவிட்டு இறங்கி நிற்கின்றனர் சிலர் குடும்பத்தினருடன் சாலை ஓரங்களில் விளையாடி கொண்டிருக்கின்றனர்
இது போன்று வனச் சாலைகளில் அத்துமீறும் நபர்களை ரோந்து செல்லும் வனத்துறையினர் பிடித்து எச்சரித்து அபராதம் விதிக்கின்றனர் .
ஆனாலும் தினமும் இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன . அதிலும் குறிப்பாக தெப்பக் காடு முதல் கல்லட்டி வரை உள்ள சாலைகளில் அதிகமாக இது போன்ற சம்பவங்கள் தினமும் நடந்து கொண்டு தான் உள்ளது என்று அப்பகுதியில் உள்ள ஆர்வலர்கள் கூறுகின்றனர் .
முதுமலை புலிகள் காப்பக வனத்துறையில் அதிகளவு ஊழியர்கள் பணியாற்றி வந்தாலும் சரியான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைந்த கண்காணிப்பு இல்லாததால் தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றும் பெரிய அளவிலான எச்சரிக்கை பலகைகள் சோதனை சாவடியில் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாலும் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை அதிகப்படுத்துவதாலும் பாரபட்சமற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றால் மட்டுமே இப்பகுதியில் மனித – விலங்குகள் மோதலை கட்டுப்படுத்த முடியும் என்றும் இது குறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் IFS அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதியில் வசித்துவரும் வன ஆர்வலர்கள் கூறுகின்றனர்.