திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு செய்வதில் ரயில்வேயில் டிக்கெட் புக் செய்யும் பெண் ஊழியரே மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலையில் 3 மணியில் இருந்தே பயணச்சீட்டு முன்பதிவு செய்ய ஏராளமானோர் காத்திருந்த நிலையில், கவுண்ட்டர் 4ல்(Window- 4) டிக்கெட் முன்பதிவு செய்யும் பெண் ஊழியர் காலை 8 மணிக்கு முன்பதிவு ஓபன் ஆன நிலையில் 7-58 மணிக்கு வரிசையில் நின்றவர்களிடம் முன்பதிவு பாரத்தை வாங்காமல், கவுண்டர் உள்புறமாக வந்து கொடுத்த சிலரின் (புரோக்கர்) முன்பதிவு படிவத்தினை பெற்று அதற்கு டிக்கெட் முன்பதிவு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வரிசையில் நின்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அந்த பெண் ஊழியர் எதையும் கண்டுகொள்ளவில்லை. இதனால் , சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பயிலும் மாணவ மாணவிகளுக்காக அதிகாலை முதலே டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருந்த பெற்றோர்கள் ஏமாற்றமும்,வேதனையும் ,கடும் அதிருப்தியும் அடைந்தனர்.
வேலியே பயிரை மேய்வது போல் ரயில்வே ஊழியரே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதால் திண்டுக்கல் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.