திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செம்பிரான்குளம் பாண்டியன் பாறை பகுதியில் ஒட்டன்சத்திரம் வனச்சரக வனகாப்பாளர்கள் மதுரை வீரன், சிவக்குமார், வேட்டை தடுப்பு காவலர் காமராஜ் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அப்பகுதியில் 15 ஜெலட்டின் குச்சிகள், 23 டெட்டனேட்டர் , 18 என்இடி டெட்டனேட்டர் கிடந்தன. வெடிபொருட்களுடன் கொடைக்கானல் போலீசில் மதுரை வீரன் புகார் அளித்தார். இதனை அடுத்து மலைப்பகுதியில் தீவிரவாதிகள் , நக்சல் நடமாட்டம் உள்ளதா என திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப், டி.எஸ்.பி., மதுமதி, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ,நக்சல் ஒழிப்பு போலீசார் , ஒட்டன்சத்திரம் ரேஞ்சர் ஆறுமுகம் தலைமையிலான வனக்குழுவினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் விசாரணையில் தனியார் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு ரோடு வசதி ஏற்படுத்த சில மாதங்களுக்கு முன் பாறைகள் வெடி வைத்து தகர்ப்பதற்காக இந்த வெடி மருந்து பொருட்கள் பயன்படுத்தியதும், இப்பணியின் போது கம்ப்ரஷர் வாகனம் விபத்துக்குள்ளாக கோவிந்தராஜ் என்பவர் காயமடைந்துள்ளார். இதில் சிதறிய வெடி பொருட்களை மறைவாக வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து இதில் தொடர்புடைய கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ் 52, வெடி மருந்துகள் வழங்கிய திண்டுகல்லை சேர்ந்த வேல்முருகன் 52, சரவணன் 27, ஆகியோரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் கூறுகையில், ”செம்பிரான்குளம் பகுதியில் தனியார் ரோடு பணிக்காக இந்த வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதில் தொடர்புடைய மூவரை கொடைக்கானல் போலீசார் கைது செய்துள்ளனர். மற்றபடி நகசல், தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து எவ்வித அறிகுறிகளும் இல்லை” என்றார்.