திருவனந்தபுரம், கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் அமைந்துள்ள அதானி துறைமுகத்துக்கு, முதல் முறையாக பிரமாண்ட கப்பல் நேற்று வந்து சேர்ந்தது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்துள்ள விழிஞ்ஞத்தில், அதானி குழுமம் சார்பில் பிரமாண்ட துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது.
பிரமாண்ட கப்பல்கள் நிறுத்தும் வசதியுடன் உள்ள இந்த துறைமுகம், சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
சர்வதேச அளவில், துறைமுக வர்த்தகத்தில் ஆறு அல்லது ஏழாவது இடத்துக்கு இந்தியா முன்னேறுவதற்கு இந்த துறைமுகம் முக்கிய பங்காற்றும்.
ஐரோப்பிய நாடான டென்மார்க்கைச் சேர்ந்த, ‘மெர்ஸ்க்’ எனப்படும் உலகின் இரண்டாவது மிகப் பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின், பிரமாண்ட சான் பெர்னாண்டோ சரக்கு கப்பல், அதானி துறைமுகத்துக்கு நேற்று வந்தது.
இதில், 2,000 கன்டெய்னர்கள் இடம் பெற்றுள்ளன. முதல் முறையாக வந்துள்ள பிரமாண்ட கப்பல் என்பதால், அதற்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநிலத்தின் துறைமுக அமைச்சர் வி.என்.வாசவன் உள்ளிட்டோர் அதை வரவேற்றனர். அதிகாரப்பூர்வமான வரவேற்பு விழா இன்று நடக்க உள்ளது.
பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய துறைமுக அமைச்சர் சர்பானந்த சோனவால், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.
துறைமுகத்தின் முதற்கட்ட பணிகளும் இன்றுடன் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரஉள்ளது.
இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட பணிகள், 2028க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.