இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வன உயிரின சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு கும்பல் வன உயிரின பாதுகாப்பு சட்டம் – 1972 -ன் கீழ் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்து கடத்த முயன்று வருவதாக மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு தெற்கு மண்டலம் இராமநாதபுரம் எல்லையோர அலுவலகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தமிழக வனத்துறையின் வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட வன பாதுகாப்பு படை ஆகியோருடன் இணைந்து நேற்று அதிகாலை முதல் கடற்கரை பகுதி சாலைகள் முழுவதும் கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்தனர் .
இந்நிலையில் நேற்று காலை சுமார் 11 மணி அளவில் மைகுண்டு என்ற இடத்தில் அந்த வழியாக வந்த TN-58 – AC – 4212 என்ற எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர் . அந்த காரில் தான் கடல் அட்டைகளை கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டு கடல் அட்டைகள் , கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை கைப்பற்றி மேல் நடவடிக்கைக்காக மண்டபம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர் . இந்த சம்பவத்தில் கார் ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டதாகவும் அவரை வனத்துறையினர் தேடி வருவதாகவும் தெரிய வருகிறது