பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் சரப்ஜோத் சிங் இணை, தென்கொரியாவின் லீ வோங்கோ – ஓ யே ஜின் இணையை எதிர்கொண்டது.
முதல் சுற்றை இழந்த போதும் மனம் தளராத இந்திய இணை, அடுத்தடுத்த சுற்றுகளில் இலக்கை நோக்கி துல்லியமாக சுட்டு புள்ளிகை குவித்தது.
இறுதியில் 16-10 என்ற புள்ளிக் கணக்கில் வென்ற மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தியது.
இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.
இதற்கு முன்பு, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்றிருந்த இந்திய வீராங்கனை மனு பாக்கர், 124 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்றவர் என்ற சாதனையை சமன் செய்தார்.
முன்னதாக 1900ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஆங்கிலோ இந்தியனான நார்மன் பிரிட்சர்ட்ஸ் தடகளத்தில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றதே சாதனையாக இருந்தது. மேலும், சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றவர் என்ற வரலாற்று சாதனையையும் மனு பாக்கர் தன் வசப்படுத்தியுள்ளார்.
அத்துடன் பி.வி.சிந்துவிற்கு பிறகு ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை எனும் பெருமையும் பெற்றுள்ளார். இந்நிலையில், நாட்டிற்கு 2 பதக்கங்களை பெற்று தந்தமைக்காக பிரதமர் மோடி உள்பட பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதன் தொடர்ச்சியாக குத்துச்சண்டையில் ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரும், லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம், 5 முறை ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்றவருமான மேரி கோம் வரலாற்று சாதனை படைத்துள்ள மனு பாக்கருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மனு பாக்கர் கடந்து வந்த பாதை:
பிப்ரவரி 18, 2002-ல் பிறந்த மனு பாக்கருக்கு 22 வயது தான் நிறைவடைந்துள்ளது.
இவர் ஹரியானாவின் ஜாஜ்ஜர் மாவட்டத்தில் உள்ள கோரியா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்.
ஒலிம்பிக்கின் மூலம் தற்போது இவருடைய பெயர் அதிகளவில் உச்சரிக்கப்பட்டு வந்தாலும் விளையாட்டுத் துறையில் ஏற்கனவே இவர் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
2018-ம் ஆண்டு நடைபெற்ற காமன் வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
10 மீட்டர் கலப்பு குழு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
மேலும் 2019 ISSF உலக கோப்பையில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
அதேபோல் 2018/19 ஆண்டுகளில் குவாடலஜாரா, டெல்லி, பெய்ஜிங், முனிச் மற்றும் ரியோவில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
மேலும் மூத்த துப்பாக்கிச் சூடும் வீரர் பிரிவில் 2021 ISSF உலக சாம்பியன்ஷிப்பில் 4 தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.
இதுபோக 2018ம் ஆண்டில் அவர் சிட்னி மற்றும் சுஹ்லில் நடைபெற்ற போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.