கோக்கு மாக்கு
Trending

Wayanad: ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்த Madras Sappers; பேரிடர் சூழலில் சவாலான பணி.. யார் இவர்கள்?

Madras Sappers: இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினீயரிங் குழுவினர் (Madras Engineering Group), வயநாட்டில் காட்டாற்று வெள்ளத்துக்கு நடுவே 190 அடி நீளத்துக்கு பெய்லி பாலம் (Bailey bridge) அமைத்திருக்கின்றனர்.நிலச்சரிவால் உருக்குலைந்த வயநாட்டில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும், இந்திய ராணுவத்தினரும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். தொடர்ந்து நான்காவது நாளாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.Wayanad – மீட்புப் பணி
இருப்பினும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை, சூரல்மலா பகுதியை இணைக்கும் பாலம் நிலச்சரிவால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மீட்புக்குழுவினர், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முழுமையாக செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில், இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினீயரிங் குழு (Madras Engineering Group), காட்டாற்று வெள்ளத்துக்கு நடுவே 190 அடி நீளத்துக்கு பெய்லி பாலம் (Bailey bridge) அமைத்திருக்கின்றனர். குழுவிலிருந்த ஒரே பெண் அதிகாரியான மேஜர் சீதா ஷெல்கே தலைமையில் இந்தப் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று முன்தினம் (புதன்) இரவு ஒன்பது மணியளவில் தொடங்கப்பட்ட இந்த எஃகு பாலம் அமைக்கும் பணி, நேற்று மாலை 5 முதல் 6 மணிக்குள் முழுமையாக முடிக்கப்பட்டது.இதற்காக, கர்நாடகா-கேரள துணைப் பகுதியின் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் (GOC) மேஜர் ஜெனரல் வினோத் டி.மேத்யூ தலைமையிலான 70 பேர் கொண்ட குழு பெங்களூருவிலிருந்து சூரல்மலாவுக்கு வந்தனர். மேலும், பாலம் அமைப்பதற்குத் தேவையான பொருள்களை பெங்களூரு மற்றும் டெல்லியிலிருந்து கொண்டுவந்தனர். மெட்ராஸ் இன்ஜினீயரிங் குழு இந்தக் குழு முதன்முதலில் 1780 செப்டம்பர் 30-ம் தேதி, ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது. இது, மெட்ராஸ் சாப்பர்ஸ் (Madras Sappers) என்றும் அழைக்கப்படுகிறது. முதலில் மதராஸ் மாகாணத்தில் பிரிட்டிஷ் ராணுவத்துக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த மெட்ராஸ் சாப்பர்ஸ், கடந்த 244 ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. தற்போது, உலகின் முன்னணி ராணுவ இன்ஜினீயரிங் யூனிட்டுகளில் இதுவும் ஒன்று.

சிறப்பு பயிற்சிகளைப் பெற்ற இந்தக் குழுவினர், பாலங்களை அமைப்பதற்கும், கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்வதற்கும், ராணுவத்தினருக்கான பாதையை ஏற்படுத்துவதற்கும் போர்க்களங்களில் முதல் ஆளாக வந்து நிற்பர். இவர்கள் இயற்கை பேரிடர்களின்போதும் களத்தில் இறங்கி மீட்புப் பணிகளுக்கு உதவுகின்றனர். கடந்த காலங்களில் கேரளாவில் வெள்ள மீட்புப் பணிகளிலும் இவர்கள் முக்கிய பங்காற்றியிருக்கின்றனர். பெய்லி பாலம்!
இவர்கள் அமைக்கும் பெய்லி பாலம் என்பது ஒருவகையான ராணுவ பாலம். இது இரண்டாம் உலகப்போரின்போது பிரிட்டிஷ் பொறியாளர் சர் டொனால்ட் பெய்லி (Sir Donald Bailey) என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த எஃகு பாலம், போர் நடைபெறும் இடங்களில் தேவைக்கேற்றவாறு விரைவாக அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எளிதில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச்செல்லக்கூடிய இந்த பாலம் நிலச்சரிவு போன்ற அவசரகாலங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, தேவைக்கேற்ற வகையில் நீளமாகவும், சிறியதாகவும் அமைக்கலாம். அதற்கு சிறிய அளவிலான குழுவே போதும். மேலும், இந்தப் பாலங்களை, தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதிகளுக்கு ட்ரக்குகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டுசெல்லலாம். எளிதில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டுசெல்பவையாக இருந்தாலும், இவை உறுதியானவை மற்றும் பாதுகாப்பானவை. கனரக வாகனங்கள் இதில் பயணிக்கலாம். பேரிடர் களத்தில் சவாலான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, வெற்றிகரமாக முடிக்கப்பட்ட சாதனையில் முக்கிய பங்கு வகித்த ராணுவ பொறியியில் பிரிவு பெண் மேஜர் சீதா ஷெல்கேவின் அர்ப்பணிப்பிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button