கோக்கு மாக்கு
Trending

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு.. தீர்ப்பையே மாற்றிய சென்னை ஐகோர்ட்! தண்டனை குறைப்பு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.பி.பரமசிவத்துக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராத தொகையையும் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை ஐகோர்ட்.

சின்ன சேலம் தொகுதியில் கடந்த 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் ஆர்.பி பரமசிவமும், திமுக சார்பில் ஆர் .மூக்கப்பனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஆர்.பி.பரமசிவம் 39,042 வாக்குகள் கூடுதல் பெற்று திமுக வேட்பாளர் மூக்கப்பனை வென்றார்.1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை சின்னசேலம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஆர்.பி.பரமசிவம், வருமானத்துக்கு அதிகமாக 28 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர், கடந்த 1998 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை முதலில் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்திலும், பின்னர் சென்னையில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக, இவ்வழக்கு மீண்டும் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பரமசிவம் மற்றும் அவரது மனைவி பூங்கொடிக்கு எதிரான இந்த வழக்கை விழுப்புரம் எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த போது, கடந்த 2017 ஆம் ஆண்டு பரமசிவத்தின் மனைவி பூங்கொடி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

இதனால் அவரது பெயர், வழக்கில் இருந்து நீக்கப்பட்டது.முன்னாள் எம்.எல்.ஏ பரமசிவத்துக்கு எதிரான இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.பரமசிவத்துக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 33 லட்சத்து 4 ஆயிரத்து 168 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது. பரமசிவம் எம்.எல்.ஏ.வாக இருந்த காலகட்டத்தில் அவர் பெயரிலும், அவரது மனைவி பூங்கொடி, மகன்கள் மயில்வாகனம், பாபு மற்றும் கோவிந்தன் ஆகியோரின் பெயரிலும் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கவும் விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் எம் எல்.ஏ. பரமசிவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், முன்பு விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் உதயகுமார் ஆஜராகி வாதங்களை வைத்தார்.

பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி, வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை கணக்கிடும் போது, 26 லட்சம் ரூபாய் என்ற அளவில் உள்ளதாகக் கூறி, முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்துக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை இரண்டு ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையை 33 லட்சம் ரூபாயில் இருந்து 26 லட்சம் ரூபாயாக குறைத்த நீதிபதி, சொத்துக்கள் முடக்கம் செய்யும்படி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். கூடுதலாக செலுத்தப்பட்ட அபராதத் தொகையை திருப்பி வழங்கும்படி உத்தரவிட்ட நீதிபதி, ஏற்கனவே அனுபவித்த தண்டனை காலத்தையும் கழித்துக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button