தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஏ.புதுப்பட்டி புறவழிச்சாலை பகுதியில் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி பெரியகுளம் வடகரை காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையில் காவல்துறையினர் நள்ளிரவில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். ரோந்து பணியின் போது வாகன சோதனையிலும் அவ்வபோது ஈடுபட்டு வந்தனர் . அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தபோது 2கிலோ கஞ்சா மற்றும் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் 30 பாக்கெட்டுகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சு.சிவபிரசாத் IPS உத்தரவின் பேரில் பெரியகுளம் உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் குருவெங்கட்ராஜ் அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மெத்தப்பெட்டமைன் போதைப் பொருள் மொத்த விற்பனையாளர் யார் மேலும் இந்த போதை பொருள் கடத்தலுக்கு யார் உடந்தை முக்கிய குற்றவாளி யார்? தமிழகத்தில் எந்தெந்த நகரங்களில் விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறித்த விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் கோவை ஈரோடு கம்பம் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர் இந்த நிலையில் மெத்தப்பெட்டமைன் போதை பொருள் தேனி திண்டுக்கல் மாவட்டங்களுக்கு சப்ளை செய்யும் முக்கிய குற்றவாளிகளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மோகன் நோர்பட் (வயது 28) ஆதர்ஷ் (வயது 25) ஆகிய இரண்டு இளைஞர்களை தனிப்படையினர் கடந்த ஒரு மாத காலமாக தேடி வந்த நிலையில் நேற்று திருவனந்தபுரம் பகுதியில் இருந்து கைது செய்து அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து பெரியகுளம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்
குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்த பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் மற்றும் காவல் துறையினர்களுக்கும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.சிவபிரசாத் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்