தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் ஒன்றான சாத்தனூர் அணை 1958 -ல் கட்டப்பட்டது. இது தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தண்டராம்பட்டு தாலுக்காவில் சென்னகேசவ மலைகளுக்கு இடையே பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகரத்திலிருந்து 30 கிமீ (19 மைல்) சாலை வழியாக அணையை அடையலாம். இந்த அணை பகுதி மற்றும் பாசன நீர் வாய்க்கல்கள் முழுவதும் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்து விடப்படும் வாய்க்கால்களில் ஒரு வாய்க்கால் கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் வடபொன்பரப்பி கிராமத்தின் வழியாக செல்கின்றது .
மேற்கண்ட கிராமத்திற்கு உட்பட்ட அந்தோணியார் நகரின் வழியாக செல்லும் இந்த வாய்க்காலை கடந்த கோவிட் கட்டுப்பாட்டிற்கு முன்னர் (சுமார் 2018 ம் ஆண்டு வாக்கில் ) தூர்வாரி சுத்தம் செய்ததாகவும் அதன் பின்னர் தற்போது வரை எந்த பராமரிப்பு பணியையும் பொது பணி துறையினர் மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது .
இதனால் அணைப்பகுதியில் இருந்து வாய்க்காலில் நீர் வரும் வழி முழுவதும் புதர் மண்டி பக்கவாட்டு சுவர்கள் ஆங்காங்கே சேதமடைந்து நீர் முழுவதும் கடைமடை வரை கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது .
மேலும் அந்தோணியார் நகர் பகுதில் உள்ள இந்த வாய்காலை ஒட்டி வசித்து வரும் குடியிருப்பு வாசிகள் வீட்டு கழிவு நீரை வெளியேற்றி இந்த வாய்க்காலில் விடுவது , ஆடுமாடுகளை கட்டி வைக்க கரைகளை சேதப்படுத்துவது மற்றும் தனிநபர் ஆக்கிரமிப்பு போன்ற செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.
இதனால் இப்பகுதி வழியாக வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டாலும் முழுமையாக கடைமடை வரை செல்லாது என்றும் அப்படியே செல்லும் மிச்சம் மீதி நீரையும் கழிவுநீர் கலப்பதால் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது . இதனால் இந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்படுவது மட்டுமல்லாது விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்படும் என்று இப்பகுதியினர் கூறுகின்றனர்.
எனவே வாய்க்காலை எதிர் வரும் மழை காலம் தொடங்கும் முன்னர் சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவு நீர் கலப்பதை தடுத்து பராமரிப்பு பணிகளை முழு வீச்சில் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர் .