கூட்டாடாவில் இருந்து கிளம்பிய பேருந்து, கெங்கரை கோயில்மேடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையில் மின்கம்பி அறுந்து கிடந்ததை ஓட்டுநர் பிரதாப் கண்டுள்ளார். சுதாரித்த ஓட்டுநர் பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக கிழே இறக்கியிருக்கிறார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் கோத்தகிரி அருகில் உள்ள கூட்டாடா கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. கோத்தகிரி அரசு பணிமனையில் இருந்து செல்லும் பேருந்தை இரவு நேரங்களில் கூட்டாடா கிராமத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். காலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கோத்தகிரியை வந்தடையும். இன்று காலையும் வழக்கம்போலவே பயணிகள் பயணித்துள்ளனர். பிரதாப் என்ற ஓட்டுநர் பேருந்தை இயக்கியிருக்கிறார்.கூட்டாடாவில் இருந்து கிளம்பிய பேருந்து, கெங்கரை கோயில்மேடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையில் மின்கம்பி அறுந்து கிடந்ததை ஓட்டுநர் பிரதாப் கண்டுள்ளார்.
சுதாரித்த ஓட்டுநர் பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக கிழே இறக்கியிருக்கிறார். ஆனால், கடைசியாக அவர் இறங்க முயற்சித்த போது மின்சாரம் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இது குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் குறித்து தெரிவித்த உள்ளூர் மக்கள், “காலையில் லேசான சாரல் மழை பெய்தது. கடுமையான பனி மூட்டமும் காணப்பட்டது. மின்கம்பி அறுந்து தாழ்வாக தொங்கியிருக்கிறது.அந்த வழியாக வந்த பேருந்தின்மீதும் மோதியிருக்கிறது. அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என பயணிகளை பாதுகாப்பாக இறக்கிவிட்ட டிரைவர் பிரதாப், மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்” என்றனர் வேதனையுடன்